சைலண்ட்டா எவ்ளோ பெரிய சாதனை... எப்பவுமே தான் ஒரு க்ளாஸ் வீரர்தான்னு மீண்டும் நிரூபிச்சுருக்காரு தவான்!
மும்பை : ஐபிஎல் 2021 தொடரின் நேற்றைய போட்டியில் 85 ரன்களை குவித்து ஆட்ட நாயகனாக தேர்வாகியுள்ளார் டெல்லி கேபிடல்ஸ் அணி வீரர் ஷிகர் தவான்.
துவக்க வீரர் பிரித்வி ஷாவுடன் இணைந்து 138 ரன்களை பார்ட்னர்ஷிப்பை அமைத்து அதிரடி கிளப்பியுள்ளார் ஷிகர்.
மேலும் நேற்றைய போட்டியின்மூலம் மற்றொரு சாதனையையும் ஷிகர் நிகழ்த்தியுள்ளார்.

2வது போட்டி
ஐபிஎல் 2021 தொடரின் நேற்றைய இரண்டாவது போட்டியின் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் டெல்லி கேபிடல்ஸ் அணியின் துவக்க வீரர் ஷிகர் தவான். பிரித்வி ஷாவுடன் அவர் இணைந்து பார்ட்னர்ஷிப்பில் அடித்த 138 ரன்களே நேற்றைய போட்டியின் பேசுபொருளாக உள்ளது.

அதிரடி ஆட்டம்
எப்போதும் தான் ஆடும் போட்டிகளில் தன்னுடைய அதிரடியை நிரூபித்து விடுவார் டெல்லி கேபிடல்ஸ் அணியின் துவக்க வீரர் ஷிகர் தவான். நேற்றைய போட்டியில் சிஎஸ்கேவிற்கு எதிராக 54 பந்துகளில் 85 ரன்களை குவித்துள்ளார். அதில் 10 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸ்களும் அடக்கம்.

சாதனைக்கு சொந்தக்காரர்
இதன்மூலம் அணியை வெற்றிப்பாதைக்கு எளிதாக அழைத்து சென்றார். நேற்றைய போட்டியின்மூலம் ஐபிஎல் போட்டிகளில் 600 பவுண்டரிகளை அடித்த முதல் வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரராகியுள்ளார் தவான். இதில் அடுத்தடுத்த இடங்களில் டேவிட் வார்னர் மற்றும் விராட் கோலி முறையே 510 மற்றும் 507 ஃபோர்களை அடித்து இடம்பெற்றுள்ளனர்.

அதிக ரன் குவித்த வீரர்
மேலும் சிஎஸ்கேவிற்கு எதிராக அதிக ரன்களை குவித்துள்ள வீரர் என்ற பெருமையும் தவானுக்கு நேற்றைய போட்டியிமூலம் கிடைத்துள்ளது. 910 ரன்களை அவர் சிஎஸ்கேவிற்கு எதிராக அடித்துள்ளார். இதில் ஒரு சதமும் அடங்கும். அடுத்த இடத்தில் 901 ரன்களுடன் விராட் கோலி உள்ளார்.

3வது வீரர் தவான்
ஐபிஎல்லில் அதிக ரன்களை குவித்த 3வது வீரர் என்ற பெருமையை பெற்றிருந்த டேவிட் வார்னரை பின்னுக்கு தள்ளிவிட்டு அந்த இடத்திற்கு தவான் முன்னேறியுள்ளார். அவர் இதுவரை 177 இன்னிங்ஸ்களில் விளையாடி 5,282 ரன்களை குவித்துள்ளார். முதல் இரண்டு இடங்களில் விராட் கோலி மற்றும் சுரேஷ் ரெய்னா முறையே 5,911 மற்றும் 5,422 ரன்களுடன் உள்ளனர்.


Click it and Unblock the Notifications