ஐபிஎல் ஒளிபரப்பு உரிமையால் டோணி ரசிகர்கள் ஹேப்பி அண்ணாச்சி..!
சென்னை: ஒளிபரப்பு உரிமத்தை ஸ்டார் ஸ்போர்ட் நிறுவனம் அதிக விலைக்கு பெற்றுள்ளதால், 2018ல் நடக்க உள்ள ஐபிஎல் போட்டி மீது பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதையெல்லாம்விட, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் விளையாட உள்ள நிலையில், இந்தப் போட்டி பிரபலமடைந்துள்ளது, தல டோணியின் ரசிகர்களுக்கு விசில் போட மற்றொரு வாய்ப்பு கிடைத்துள்ளது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியம், ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டிகளை நடத்தி வருகிறது. 10 சீசன்கள் முடிந்துள்ள நிலையில், 2018ல் நடக்க உள்ள சீசனில் இருந்து ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்புவதற்கான உரிமத்தை, ஸ்டார் ஸ்போர்ட் நிறுவனம், ரூ.16,347 கோடிக்கு ஏலம் எடுத்தது.

களமிறங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ்
இதனிடையில், இரண்டு ஆண்டுகள் விளையாட இருந்த தடை நீங்கி, 2018ல் மீண்டும் களமிறங்க உள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. ஐபிஎல் போட்டிகளில் மிகவும் வெற்றிகரமான அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்ளது. 50 சதவீதத்துக்கும் அதிகமான வெற்றி கணக்குடன் அந்த அணி உள்ளது.

எதிர்பார்ப்பு அதிகம்
சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் களத்தில் இறங்க உள்ளதால், ஐபிஎல் போட்டிகள் மீதான ஆர்வம் உயர்ந்துள்ளது. மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர் என்பதையே, இந்த ஒளிபரப்பு உரிமை ஏலம் உணர்த்துகிறது.

அதிக விலை கொடுத்து
அதாவது இந்திய அணி விளையாடும் சர்வதேச போட்டிகளைவிட, ஐபிஎல் போட்டிகளுக்கு அதிக விலை கொடுத்துள்ளது ஸ்டார் ஸ்போர்ட்ஸ். இந்தியா விளையாடும் ஒரு சர்வதேச போட்டிக்கு, ரூ.33 கோடி வரைதான் வழங்கப்படுகிறது. அதே நேரத்தில், ஐபிஎல் ஒரு போட்டிக்கு, ரூ.55 கோடி வழங்க ஸ்டார் ஸ்போர்ட்ஸ் முன்வந்துள்ளது.

டோணி ராசி
இரண்டு முறை ஐபிஎல் சாம்பியனான சென்னை சூப்பர்ஸ் கிங்ஸ் அணி, மீண்டும் வந்துள்ளபோது, ஒளிபரப்பு உரிமை அதிக அளவில் விலைபோனது, தல டோணியின் ராசிதான் என்று அவருடைய ரசிகர்கள் புளங்காகிதம் அடைந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications