என்ன தலைவா.. கடைசில உன்னை புல்லு வெட்ட வச்சுட்டாங்களே.. இது தோனியின் கதை
ராஞ்சி: சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டனாக இந்நேரம் களத்தில் மகேந்திர பாகுபலி போல வேட்டையாட வேண்டிய மகேந்திர சிங் தோனி தற்போது புல் வெட்டிக் கொண்டிருக்கிறார் ராஞ்சியில் உள்ள அவரது வீட்டில். எல்லாம் இந்த கொரோனாவால் வந்த கொடுமைதான்.
Recommended Video
தோனி, புல் வெட்டிக் கொண்டிருக்கும் படத்தைப் போட்டுள்ளார் அவரது மனைவி சாக்ஷி. இது இப்போது வைரலாகி விட்டது. தலைவா.. இப்படி புல்லு வெட்டும் நிலைக்குப் போயிட்டோமே தலைவா என்று தோனி ரசிகர்கள் புலம்பிக் கொண்டுள்ளனர்.
கொரோனாவைரஸ் வந்தாலும் வந்தது விளையாட்டு உலகமே ஸ்தம்பித்துப் போய் விட்டது. இதனால் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கின்றனர் விளையாட்டு வீரர்கள் எல்லோரும். அதில் தோனியும் ஒருவர்.
புல் வெட்டும் தோனி
ஊரடங்கு தேசிய அளவில் அமல்படுத்தப்பட்டதும் தோனி என்ன செய்கிறார் என்பது தெரியாமலேயே இருந்து வந்தது. இந்த நிலையில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அவரது மனைவி சாக்ஷி. ராஞ்சியில் உள்ள தங்களது வீட்டு புல்வெளியை புல்லை செப்பனிடும் கருவி கொண்டு தோனி சமன் செய்வது போல அந்தப் படம் உள்ளது. இந்தப் படத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தனது டிவிட்டரில் போட்டுள்ளது.

போட்டோ எடுத்த சாக்ஷி
வீட்டின் புல்வெளிப் பகுதியை அழகாக செப்பனிட்டு வரும் தோனியுடன் யாரும் உடன் இருப்பதாக தெரியவில்லை. குறிப்பாக அவரது மகள் ஜிவா அங்கு இல்லை. சாக்ஷிதான் இந்தப் புகைப்படத்தை எடுத்துள்ளார். இந்தப் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. தோனி ரசிகர்கள், சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் இதை ஷேர் செய்ய ஆரம்பித்துள்ளனர்.
மகள் செய்த வேலை
சில நாட்களுக்கு முன்புதான் சாக்ஷி தனது இன்ஸ்டாகிராமில் மகள் ஜிவா குறித்த ஒரு வீடியோவைப் போட்டிருந்தார். அதில் இதே புல்வெளிப் பகுதியில் கிடந்த சருகுகளை ஜிவா எடுத்து குப்பைத் தொட்டியில் போடுவது போல வீடியோ இருந்தது. இந்த நிலையில் தற்போது அப்பா தோனி வந்து புல்வெளியை சமன்படுத்தி வருகிறார். அனேகமாக அப்பாவும் பொண்ணும் அடுத்து இங்கு டென்னிஸ் ஏதாவது ஆடினாலும் ஆடுவார்கள் போல.. அதான் சரி செய்கிறார்களோ என்னவோ.

ஏமாற்றத்தில் ரசிகர்கள்
இது ஐபிஎல் மாதமாக இருந்திருக்க வேண்டியது. இந்நேரம் போட்டிகள் சூடாக நடந்து கொண்டிருந்திருக்கும். தோனியும் அவரது சென்னை சூப்பர் கிங்ஸ் படையும் எதிரணியினரை துவம்சம் செய்திருப்பார்கள். ஆனால் அதையெல்லாம் பார்க்க முடியாமல் தவித்துப் போயுள்ளனர் ரசிகர்கள். இந்த நிலையில்தான் தங்களது கேப்டன் இப்படி வீட்டில் புல் வெட்டிக் கொண்டிருக்கும் போட்டோவைப் பார்த்து ஆறுதல் அடையும் நிலையில் ரசிகர்கள் உள்ளனர்.

ஏமாற்றத்தில் தோனி
கடந்த 2019ம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டித் தொடருக்குப் பின்னர் தோனி கிரிக்கெட் ஆடாமல் உள்ளார். இந்த ஐபிஎல் தொடருக்காக அவர் ஆவலுடன் இருந்தார். தீவிரப் பயிற்சிகளையும் மேற்கொண்டிருந்தார். ரசிகர்களும் அவரது மறு வரவுக்காக ஆவலாக இருந்தனர். ஆனால் கடைசியில் ஐபிஎல் போட்டி நடப்பதே சந்தேகமாக உள்ளது. இருப்பினும் மனம் தளராமல் உள்ளனர் தோனி ரசிகர்கள்.


Click it and Unblock the Notifications