அதுதான்.. அந்த ரன் அவுட் தான்..! ஆட்டத்தின் திருப்புமுனையே..! தோனி விக்கெட்டை கை காட்டும் சச்சின்
ஹைதராபாத்:தோனியின் ரன் அவுட் தான் பைனலில் திருப்புமுனையாக இருந்தது என்று மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் கூறியிருக்கிறார்.
ஐபிஎல் பைனலில் சென்னை சூப்பர் கிங்சை ஒரு ரன் வித்தியாசத்தில் மும்பை வீழ்த்தி 4வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கிறது. பரபரப்புக்கு பஞ்சமில்லாத போட்டியாக வர்ணிக்கப்படும் இந்த போட்டியில் பல சுவாரசிய சம்பவங்கள் இருந்தாலும் தோனியின் ரன் அவுட் பற்றி பேச்சு தான் ஹைலைட்.
ஹர்திக் வீசிய 13வது ஓவரில் தான் அந்த சர்ச்சையான அவுட் நிகழ்ந்தது. முதல் ரன் எடுத்த பின், 2வது ரன்னை எடுக்க அழைக்கிறார் தோனி. அந்த பந்தை 40 ரன்கள் எடுத்திருந்த வாட்சன் அடிக்கிறார். முதல் ரன்னை இருவரும் ஓடி எடுக்கின்றனர். பந்து ஓவர் த்ரோவாக வீசப்படுகிறது. 2வது ரன்னுக்காக ஓடலாமா வேண்டாமா என்று ஒரு நொடியில் வாட்சன் யோசிக்க... கை காட்டி வா என்று அழைக்கிறார் தோனி.

2வது ரன் தேவையா?
ஆக... 2வது ரன் வேண்டும் என்று சிக்னல் கொடுத்து வம்பை விலைக்கு வாங்கி இருக்கிறார் தோனி. அப்போது தோனி வேகமாக ஓடி வர... பந்து ஸ்டெம்பை பதம் பார்க்கிறது. தோனி அவுட்டா இல்லையா என்று 3வது நடுவரின் தீர்ப்புக்கு செல்கிறது.
தோனி ரன் அவுட்
கேமராக்களில பதிவான பல காட்சிகளை பார்க்கும் 3வது நடுவர்...இறுதியில் தோனி அவுட் என்று அறிவிக்கிறார். மைதானமே பரபரக்கிறது. வெறும் 2 ரன்களுடன் தோனி பெவிலியன் திரும்பினார். அவரின் ரன் அவுட் பல விவாதங்களை கிளப்பி இருந்தாலும், அது தான் ஆட்டத்தின் திருப்புமுனை என்று சச்சின் டெண்டுல்கர் கூறியிருக்கிறார்.

சூப்பரான பவுலிங்
அவர் மேலும் கூறியதாவது: பைனில் நடந்த திருப்புமுனை தான் தோனியின் ரன் அவுட். ஒவ்வொரு முறையும் சென்னை அணி ரன்களை அடிக்கும் போதும், அதற்கு அடுத்த ஓவரை வீசி ரன்வேகத்தை கட்டுப்படுத்தினார் பும்ரா. அது போன்று, கடைசி நேர பந்துவீச்சின் போது மலிங்கா அதிக ரன்களை விட்டுக் கொடுத்தார்.

இளமையான வீரர்கள்
ஆனால்... 20வது ஓவரில் மலிங்காவின் பந்துவீச்சு அபாரம். மிக அழகாக விக்கெட் எடுத்து ஆட்டத்தை முடித்துக் கொடுத்தார். எங்கள் அணியானது இளம் மற்றும் அனுபவம் வாய்ந்த வீரர்கள் கொண்ட அணியாக இருக்கிறது. ஜெயவர்த்தனே சொன்னது போல ராகுல் சாஹரும் அருமையாக பந்துவீசினார். ஹர்திக் பாண்டியாவும் சிறப்பாக விளையாடினார் என்றார்.


Click it and Unblock the Notifications