ENG vs ZIM: சச்சினின் 13,000 டெஸ்ட் ரன் ரெக்கார்டை உடைத்தாரா ஜோ ரூட்? உண்மை என்ன?
லண்டன்: இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் மாபெரும் டெஸ்ட் சாதனையைப் படைத்திருக்கிறார். இங்கிலாந்து அணி ஜிம்பாப்வேக்கு எதிராக விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் ஜோ ரூட் 34 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். இந்த நிலையில், அவர் டெஸ்ட் போட்டிகளில் 13,000 ரன்களைக் கடந்து மாபெரும் சாதனை படைத்தார். 153 போட்டிகளில் அவர் 13,000 டெஸ்ட் ரன்களைக் கடந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் அவர் சச்சின் சாதனையை முறியடித்ததாக கூறப்பட்டு வரும் நிலையில் அதன் உண்மைத்தன்மை என்ன என்று பார்க்கலாம்.
ஜோ ரூட் 13,000 டெஸ்ட் ரன்களைக் கடந்த முதல் இங்கிலாந்து வீரர் என்ற சாதனையைச் செய்திருக்கிறார். அடுத்து, குறைந்த போட்டிகளில் 13,000 ரன்களை எட்டிய வீரர் என்ற உலக சாதனையையும் படைத்திருக்கிறார். இதற்கு முன்பு, ஜாக்கஸ் காலிஸ் 159 டெஸ்ட் போட்டிகளில் 13,000 டெஸ்ட் ரன்களைக் கடந்தது சாதனையாக இருந்தது. அதை ஜோ ரூட் முறியடித்திருக்கிறார் (ஜோ ரூட் - 153 டெஸ்ட் போட்டிகள்).

சச்சின் டெண்டுல்கர் 163 போட்டிகளில் தான் 13,000 ரன்களைக் கடந்திருந்தார். ராகுல் டிராவிட் 160 போட்டிகளிலும், ரிக்கி பாண்டிங் 162 போட்டிகளிலும் இந்த மைல்கல்லை எட்டியிருந்தனர். இதன் மூலம் வேகமாக 13,000 டெஸ்ட் ரன்களை எடுத்த வீரர்களில் ஜோ ரூட், சச்சின் டெண்டுல்கரின் சாதனையை போட்டிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் முறியடித்தார்.
ஆனால், இன்னிங்ஸ் அடிப்படையில் ஜோ ரூட் தான் இந்த ஐவரில் மெதுவாக 13,000 ரன்களை எட்டிய வீரராக இருக்கிறார். ஜோ ரூட் 278 இன்னிங்ஸ்களில் 13000 ரன்களை எடுத்த நிலையில், சச்சின் டெண்டுல்கர் 266 இன்னிங்ஸ்களிலேயே 13,000 ரன்களை எடுத்திருக்கிறார். மேலும், இந்த ஐவரில் இன்னிங்ஸ் அடிப்படையில் விரைவாக 13,000 ரன்களை எட்டியவர் சச்சின் டெண்டுல்கர் தான்.
2010 ஜனவரி மாதம் அவர் செய்த இந்த சாதனையை இதுவரை கிரிக்கெட் உலகில் யாராலும் முறியடிக்க முடியவில்லை. முதன் முதலில் 13,000 ரன்களை எட்டிய வீரரும் சச்சின் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
விரைவாக 13000 டெஸ்ட் ரன்களை எடுத்த வீரர்கள் பட்டியல் (இன்னிங்ஸ் அடிப்படையில்)-
-
சச்சின் டெண்டுல்கர் - 266 இன்னிங்ஸ்கள், 163 போட்டிகள்
-
ஜாக்கஸ் காலிஸ் - 269 இன்னிங்ஸ்கள், 159 போட்டிகள்
-
ரிக்கி பாண்டிங் - 275 இன்னிங்ஸ்கள், 162 போட்டிகள்
-
ராகுல் டிராவிட் - 277 இன்னிங்ஸ்கள், 160 போட்டிகள்
-
ஜோ ரூட் - 278 இன்னிங்ஸ்கள், 152 போட்டிகள்
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 498 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் முதல் மூன்று பேட்ஸ்மேன்களும் சதம் அடித்தனர்.


Click it and Unblock the Notifications