சென்னை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நட்சத்திர வீரர் தினேஷ் கார்த்திக் நடப்பு சீசனில் மோசமாக விளையாடியது ஆர்சிபி ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்துள்ளது.
தினேஷ் கார்த்திக் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி நட்சத்திர வீரராக உருவெடுத்தார். அந்தஸ்தை பெற்ற தினேஷ் கார்த்திக் இந்திய அணியில் விளையாடினார்.
இந்த நிலையில் 37 வயதான தினேஷ் கார்த்திக், நடப்பு சீசனில் மட்டும் நான்கு முறை டக் அவுட் ஆனார். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை டக் அவுட்டான சோகமான சாதனையை தினேஷ் கார்த்திக் படைத்துள்ளார். இந்த சீசனில் 13 முறை விளையாடியுள்ள தினேஷ் கார்த்திக் மொத்தமாகவே 140 ரன்கள் தான் அடித்திருக்கிறார். இதில் அவருடைய சராசரி 11 என்ற அளவில் இருக்கிறது.

இதனால் தினேஷ் கார்த்திக் ஐபிஎல் தொடரிலிருந்து விலகி விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தினேஷ் கார்த்திக் ஆர் சி பி அணி நீக்கிவிடும் என்றும் செய்திகள் வெளியானது. இதனால் பலரும் தினேஷ் கார்த்திக் ஓய்வு பெற்றுவிட்டு கிரிக்கெட் வர்ணனைக்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்தியிருந்தனர். இந்த நிலையில் தன்னுடைய மோசமான ஃபார்ம் குறித்து தினேஷ் கார்த்திக் முதல் முறையாக மௌனத்தை கலைத்துள்ளார்.
இது தொடர்பாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள தினேஷ் கார்த்திக், ரசிகர்களின் எதிர்பார்ப்பை எங்களால் பூர்த்தி செய்ய முடியவில்லை.நாங்கள் எதிர்பார்த்த முடிவுகளும் கிடைக்கவில்லை.ஆனால் எங்களுடைய கனவை நாங்கள் துரத்துவதை தொடருவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இவ்வளவு சவாலான சூழ்நிலையிலும் எங்களுக்கு ஆதரவாக நின்ற அனைத்து ரசிகர்களுக்கும் எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். நீங்கள் தான் எங்களுடைய உலகம் என்று தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார். இதன் மூலம் தினேஷ் கார்த்திக் ,ஆர் சி பி அணியில் தொடர்ந்து விளையாடுவேன் என்பதை மறைமுகமாக உணர்த்தி பதிலடி கொடுத்திருக்கிறார்.