“சிஎஸ்கே பயிற்சியாளராக வரும் முன் தினேஷ் கார்த்திக் 2 தடவை நல்லா யோசிக்கணும்”.. பத்ரிநாத் பேச்சு
சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியை ஏற்பதற்கு முன்பு தினேஷ் கார்த்திக் இரண்டு முறை யோசிக்க வேண்டும் என்று முன்னாள் வீரர் பத்ரிநாத் அறிவுறுத்தியுள்ளார். சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ஸ்டீபன் பிளெமிங், கடந்த ஜூலை 2026-ல் விலகினார். அவர் இங்கிலாந்து டெஸ்ட் அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ளார்.
இதனால், 2027 ஐபிஎல் சீசனுக்காக புதிய தலைமை பயிற்சியாளரை தேடும் பணியில் சிஎஸ்கே நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. சிஎஸ்கே அணியின் புதிய பயிற்சியாளராக தமிழ்நாட்டைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக் நியமிக்கப்படலாம் என முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் கூறி இருந்தார்.

இதற்கு இடையே, ஆர்சிபி அணியின் தலைமை பயிற்சியாளர் ஆண்டி பிளவருடன் இணைந்து பேட்டிங் பயிற்சியாளர் மற்றும் ஆலோசகராக தினேஷ் கார்த்திக் செயல்பட்டு வருகிறார். ஆர்சிபி அணியுடன் கார்த்திக் தொடர்ந்து இரண்டு முறை ஐபிஎல் கோப்பைகளை வென்று சாதனை படைத்துள்ளார். இது குறித்து தனது யூடியூப் பக்கத்தில் பேசிய பத்ரிநாத், "நான் தினேஷ் கார்த்திக்காக இருந்தால், சிஎஸ்கே-விற்கு வருவது குறித்து இரண்டு முறை யோசிப்பேன். அவர் ஆர்சிபி அணியிலேயே தொடர வேண்டும். அங்கு அனைத்தும் சரியாக அமைந்து வீரர்கள் தங்களது சிறந்த ஃபார்மில் உள்ளனர். ஆர்சிபி அணியை ஒரு கடினமான சூழ்நிலையில் இருந்து கட்டமைக்க தினேஷ் கார்த்திக் பெரும் உழைப்பை தந்துள்ளார். இப்போது அதன் பலனை அறுவடை செய்ய வேண்டிய நேரம்" என்றார்.
மேலும், "சிஎஸ்கே-வில் சவால்கள் அதிகம். ஆனால், தினேஷ் கார்த்திக்கை அவ்வளவு எளிதில் ஆர்சிபி நிர்வாகம் விட்டுக்கொடுக்காது. அவர்கள் அவரை தக்கவைக்கவே முயற்சிப்பார்கள்" என்றும் பத்ரிநாத் கூறினார். தினேஷ் கார்த்திக் ஆலோசகராக வந்தபின் ஆர்சிபி அணி இரண்டு முறை தொடர்ந்து கோப்பை வென்றுள்ளதால் அந்த அணியை விட்டு தினேஷ் கார்த்திக் வருவது கடினமே.
பிளெமிங் இல்லாத சிஎஸ்கே அணிக்கு புதிய பயிற்சியாளராக பிரண்டன் மெக்கல்லம், மைக் ஹசி, இயான் மோர்கன், ராகுல் டிராவிட் உள்ளிட்டோரின் பெயர்களும் பரிசீலனையில் உள்ளன. தற்போது தோனியின் முடிவுக்காக சிஎஸ்கே காத்திருப்பதால், பயிற்சியாளர் தேர்வு தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications

