'ஓ! இது தான் காரணமா..!' அஸ்வின் - மோர்கன் மோதலில் யார் மீது தப்பு.. மனம் திறந்த தினேஷ் கார்த்திக்
துபாய்: டெல்லிக்கும் கொல்கத்தாவுக்கும் இடையே நேற்றைய போட்டியில் மோர்கன் மற்றும் அஸ்வினுக்கு இடையே மோதல் ஏற்பட்ட போது தான் சமாதான தூதராகச் செயல்பட்டதாகக் கொல்கத்தா அணியின் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் தெரிவித்தார்.
கொரோனா 2ஆம் அலை காரணமாகத் தற்காலிகமாகத் தள்ளி வைக்கப்பட்டிருந்த ஐபிஎல் போட்டிகள் சுமார் 3 மாத இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஐக்கிய அமீரகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. அனைத்து அணிகளும் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற வேண்டும் என்ற முனைப்பில் செயல்பட்டு வருவதால் ஒவ்வொரு போட்டிகளிலும் அனல் பறக்கிறது.

கொல்கத்தா வெற்றி
அப்படி நேற்று ஷார்ஜாவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி கொல்கத்தாவை எதிர்கொண்டது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த டெல்லி அணி தொடக்கம் முதலே திணறி வந்தது. 20 ஓவர்கள் பேட் செய்த டெல்லி அணி 9 விக்கெட்களை இழந்து வெறும் 127 ரன்களை மட்டும் எடுத்திருந்தது. அடுத்துக் களமிறங்கிய கொல்கத்தா அணியும் சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்து வந்தாலும்கூட கடைசியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தியது.

அஸ்வின்
இதன் மூலம் 5 வெற்றிகளுடன் கொல்கத்தா அணி புள்ளிப் பட்டியலில் 4ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. அதேநேரம் 16 புள்ளிகளுடன் டெல்லி 3ஆவது இடத்திலேயே தொடர்கிறது. டெல்லி கேபிடல்ஸ் அணி பேட்டிங் செய்த போது 19ஆவது ஓவரை வெங்கடேஷ் வீசினார். ரிஷப் பந்த் அந்த ஓவரின் கடைசி பந்தை அருகே தட்டிவிட்டு ஒரு ரன் எடுக்க ஓடினர். அப்போது திரிபாதி பந்தை ஸ்டம்பை குறித்து வைத்து எறிந்தார். அது ரிஷப் பந்த்தின் உடலில் பட்டுச் செல்லவே, அஸ்வின் 2ஆவது ரன்னுக்கு ஓடினார்.

திடீர் மோதல்
பொதுவாகவே ஃபீல்டர் பந்தை எறியும் போது அது பேட்ஸ்மேன்களின் உடலில் பட்டால், அவர்கள் ரன் ஓடமாட்டார்கள். இது கிரிக்கெட்டில் ஸ்பிரிட்டாகும். ஆனால், அடுத்து 20 ஓவரின் முதல் பந்திலேயே டிம் சவுதி பந்தில் அஸ்வின் ராணாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அப்போது அருகில் சென்ற சவுதி, அஸ்வினிடம் ஏதோ கூறினார். அதற்கு அஸ்வினும் எதோ பதில் கூற வாக்குவாதம் ஏற்பட்டது.

தினேஷ் கார்த்திக்
இதைக் கண்ட கொல்கத்தா அணியின் கேப்டன் மோர்கனும் வந்து எதோ கூறவே வாக்குவாதம் முற்றியது. அப்போது விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் தான் வந்து அஸ்வினை சமாதானம் செய்து அனுப்பி வைத்தார். இந்த சம்பவம் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தினேஷ் கார்த்திக் கூறுகையில், "19 ஓவரில் ராகுல் திரிபாதி பந்தை வீசினார். அது ரிஷப் பந்த் மீது பட்டது. அதன் பிறகு அஸ்வின் ரன் ஓடினார்.

அமைதி தூது
இது மோர்கனுக்கு பிடிக்கவில்லை என்றே நினைக்கிறேன். இது போன்ற சூழல்களில் கிரிக்கெட் ஸ்பிரிட் காரணமாக பேட்ஸ்மேன்கள் ரன் எடுக்கக் கூடாது என்று எதிர்பார்ப்பவர் மோர்கன். இதில் யார் தவறு யார் சரி என்று தெளிவாகக் கூற முடியாது. இந்த விஷயத்தில் எனக்குத் தனி கருத்து உள்ளது. ஆனால், அந்த சூழலில் இருவரையும் என்னால் சமாதானப்படுத்த முடிந்தது என்பது எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது" என்றார்.

மோர்கன் கருத்து
அஸ்வினுடன் நடைபெற்ற மோதல் குறித்து போட்டி முடிந்த பிறகு மோர்கன் கூறுகையில், "இரு அணிகளும் மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். நாங்கள் சரியாக எங்கள் திட்டத்தைச் செயல்படுத்தினோம். களத்தில் நிறைய விஷயங்கள் நடைபெற்றது. அதையெல்லாம் தாண்டி நாங்கள் வெற்றி பெற எங்கள் தலைமை பயிற்சியாளரின் பங்கு முக்கியமானது" என்று அவர் தெரிவித்தார். கொல்கத்தா அணி தனது அடுத்த போட்டியில் பஞ்சாப் அணியை வரும் அக்டோபர் 1ஆம் தேதி எதிர்கொள்கிறது.


Click it and Unblock the Notifications