ஆன்டிகுவா டெஸ்ட்... "அட்டாக்" வெற்றியை நோக்கி இந்திய அணி!
நார்த் சவுன்ட், ஆன்டிகுவா: மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெறும் நிலையில் உள்ளது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் அபாரமான பேட்டிங் மற்றும் பந்து வீச்சு காரணமாக மேற்கு இந்தியத் தீவுகள் அணி பாலோ ஆன் வாங்கி தனது 2வது இன்னிங்ஸை விளையாடி வருகிறது.
முன்னதாக விராத் கோஹ்லியின் இரட்டை சதம், அஸ்வினின் சதம், ஷிகர் தவானின் சிறப்பான ஆட்டம் உள்ளிட்டவை காரணமாக இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 566 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது.
இதையடுத்து ஆட வந்த மேற்கு இந்தியத் தீவுகள் அணி தனது முதல் இன்னிங்ஸை 243 ரன்களுக்கு இழந்தது. இதையடுத்து அது பாலோ ஆன் பெற்று 2வது இன்னிங்ஸைத் தொடங்கியது. 3வது நாள் ஆட்ட நேர இறுதியில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி 21 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்துள்ளது.

2 நாள் ஆட்டம் பாக்கி
இன்னும் 2 நாள் ஆட்டம் பாக்கி உள்ளது. இந்திய அணியின் பந்து வீச்சும் சிறப்பாக உள்ளது. எனவே இந்தியா இன்னிங்ஸ் வெற்றியைப் பெறும் நிலையில் உள்ளது.

சபாஷ் சமி
இந்திய பேட்டிங் அசத்திய நிலையில் தற்போது பவுலர்கள் கலக்கி வருகின்றனர். மேற்கு இந்தியத் தீவுகளை முடக்கிப் போட முக்கியக் காரணம் முகம்மது சமியும், உமேஷ் யாதவும்தான். இருவரும் தலா 4 விக்கெட்களைச் சாய்த்தனர்.

போராடிய டோரிச்
மறுபக்கம் கேப்டன் ஜேசன் ஹோல்டரும், ஷான் டோரிச்சும் ரன் குவிக்கப் போராடினர். டோரிச் 57 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். கேப்டன் ஹோல்டர் 36 ரன்களை எடுத்தார். இருவரும் சேர்ந்து 8வது விக்கெட்டுக்கு 69 ரன்களைச் சேர்த்தனர்.

302 ரன்கள் பின்தங்கிய நிலையில்
தற்போது மேற்கு இந்தியத் தீவுகள் அணி இந்தியாவை விட 302 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது. இன்னும் 2 நாட்கள் ஆட்டம் நடைபெறவுள்ள நிலையில் இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு மிகப் பிரகாசமாக உள்ளது.


Click it and Unblock the Notifications