அனுஜ் ராவத்தின் மரண மாஸ் கேமியோ.. பொறுப்பாக ஆடிய மேக்ஸ்வெல்.. ராஜஸ்தானுக்கு சவாலான இலக்கு!
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டூ பிளஸிஸ் மற்றும் மேக்ஸ்வெல்லின் அபாரமான அரைசதம் காரணமாக ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 171 ரன்கள் சேர்த்து அசத்தியுள்ளது.
ஐபிஎல் தொடரின் 60வது லீக் போட்டியில் ராஜஸ்தான் அணியை எதிர்த்து பெங்களூரு அணி விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் டூ பிளஸிஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்தப் போட்டியில் ஆர்சிபி அணியின் ஹசரங்கா, ஹேசல்வுட் ஆகியோர் நீக்கப்பட்டு பிரேஸ்வெல் மற்றும் பார்னல் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் ஆர்சிபி அணி சார்பாக டூ பிளஸிஸ் - விராட் கோலி இணை களமிறங்கியது. ஆடுகளம் சுழலுக்கு சாதகமாக இருந்ததால், இரண்டாவது ஓவரிலேயே ஆடம் ஷாம்பா அட்டாக்கில் கொண்டு வரப்பட்டார். இதனைத் தொடர்ந்து பவர் பிளே ஓவர்களுக்குள் சாஹல் மற்றும் அஸ்வினும் அட்டாக்கில் கொண்டு வரப்பட்டனர். இதன் காரணமாக ஆர்சிபி அணி 42 ரன்கள் சேர்த்திருந்தது.
இதனைத் தொடர்ந்து 7வது ஓவரை வீசிய ஆசிஃப் பந்துவீச்சில் விராட் கோலி 18 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் டூ பிளஸிஸ் - மேக்ஸ்வெல் இணை சேர்ந்தது. நிதானமாக ஆடிய இந்த கூட்டணி, அவ்வப்போது சில பவுண்டரிகளை விளாசியது. இதனால் 10 ஓவர்கள் முடிவில் ஆர்சிபி அணி 78 ரன்கள் சேர்த்திருந்தது. தொடர்ந்து சந்தீப் சர்மா வீசிய ஓவரில் மேக்ஸ்வெல் அதிரடியை தொடங்கினார். அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசிய அவர், அஸ்வின் வீசிய ஓவரில் அபாரமாக ஒரு சிக்சரையும் விளாசினார்.
பின்னர் ஆசிஃப் பந்துவீச்சில் சிக்சர் அடித்து டூ பிளஸிஸ் நடப்பு சீசனில் 7வது அரைசதத்தை விளாசினார். அதையடுத்து 55 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், தொடர்ந்து வந்த லோம்ரோர் 1 ரன்னிலும், தினேஷ் கார்த்திக் டக் அவுட்டாகியும் வெளியேறினர். இதனால் 16 ஓவர்கள் முடிவில் ஆர்சிபி அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 123 ரன்களை மட்டுமே சேர்த்தது. பின்னர் சாஹல் வீசிய 17வது ஓவரில் மேக்ஸ்வெல் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசி அரைசதத்தை கடந்தார். ஆனால் அவரும் சந்தீப் சர்மா பந்தில் 54 ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தார்.
இதையடுத்து பிரேஸ்வெல் - அனுஜ் ராவத் ஜோடி கடைசி ஓவர்களில் அதிரடியாக ஆடியது. 19வது ஓவரில் 10 ரன்கள் சேர்க்கப்பட்ட நிலையில், ஆசிஃப் வீசிய கடைசி ஓவரில் அனுஜ் ராவத் இரு சிக்சர்கள், ஒரு பவுண்டரியை விளாசி அசத்தினார். இதன் மூலம் ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 171 ரன்கள் சேர்த்துள்ளது. சிறப்பாக ஆடிய அனுஜ் ராவத் 11 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து மிரட்டினார்.


Click it and Unblock the Notifications