வைபவ் சூர்யவன்ஷி அணி வெற்றி.. துலீப் டிராபியில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது கிழக்கு மண்டலம்
பெங்களூர்: 2026 துலீப் டிராபி கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியில், மத்திய மண்டல அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இஷான் கிஷன் தலைமையிலான கிழக்கு மண்டல அணி இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி கிழக்கு மண்டல அணியின் துணை கேப்டனாக இருக்கும் நிலையில் அவரது அணி அபாரமாக ஆடி வெற்றி பெற்றுள்ளது. அவரது அதிரடி ஆட்டம் இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது.

பெங்களூருவில் நடந்த இந்தப் போட்டியில் முதல் இன்னிங்க்ஸில் இரு அணிகளும் சரி சமமாக 266 ரன்கள் சேர்த்தன. மத்திய மண்டல அணி இரண்டாவது இன்னிங்க்ஸில் 158 ரன்கள் எடுத்தது. 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் கிழக்கு மண்டல அணி 2-வது இன்னிங்ஸை ஆடியது. தொடக்க வீரர் வைபவ் சூர்யவன்ஷி 43 பந்துகளில் 3 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 40 ரன்கள் குவித்து நல்ல அடித்தளம் அமைத்தார்.
கேப்டன் இஷான் கிஷன் ஆட்டமிழக்காமல் 39 ரன்கள் எடுத்தார். எட்டாம் வரிசையில் இறங்கிய முகமது ஷமி பவுண்டரி அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். இதனால் கிழக்கு மண்டல அணி 39.3 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
முதல் இன்னிங்ஸ் ஆட்டம்
இந்த அரையிறுதியின் முதல் இன்னிங்ஸில் 92 ரன்கள் சேர்த்து சதம் அடிக்கும் வாய்ப்பை நூலிழையில் தவறவிட்ட வைபவ், 2-வது இன்னிங்ஸிலும் 40 ரன்கள் எடுத்து கிழக்கு மண்டலத்தின் வெற்றிக்கு காரணமாக விளங்கினார். முன்னதாக, இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் மத்திய மண்டலம் 266 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அந்த அணி தரப்பில் ரிங்கு சிங் 60 ரன்கள் எடுத்தார். கிழக்கு மண்டலம் தரப்பில் முகேஷ் குமார் மற்றும் அபிஜித் சர்க்கார் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
வைபவ் சூர்யவன்ஷி அதிரடிக்கு முற்றுப்புள்ளி.. ஓடிப்போய் பாய்ந்து கேட்ச் பிடித்த ரஜத் படிதார்!
தொடர்ந்து முதல் இன்னிங்ஸை விளையாடிய கிழக்கு மண்டல அணிக்கு வைபவ் 92 ரன்கள் மற்றும் அபிமன்யூ ஈஸ்வரன் 69 ரன்கள் எடுத்து அபார துவக்கம் அளித்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களே எடுத்தனர். அந்த அணி 266 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது. இதையடுத்து, 2-வது இன்னிங்ஸை விளையாடிய மத்திய மண்டலம் 158 ரன்களுக்கு சுருண்டது. முகேஷ் குமார் 4 விக்கெட்டுகள் மற்றும் ஷமி 3 விக்கெட்டுகள் வீழ்த்தி மத்திய மண்டல அணியை நிலைகுலைய வைத்தனர். இந்த வெற்றியால் கிழக்கு மண்டல அணி 2026 துலீப் டிராபி தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது.


Click it and Unblock the Notifications
