பிராவோ ரிட்டர்ன்ஸ்.. மறுபடியும் களத்தில் இறங்க முடிவு.. அதிரடி அறிவிப்பு!
ஜமைக்கா : சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தொடர்ந்து ஆடி வரும் டிவைன் பிராவோ, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்டார்.
எனினும், தற்போது ஓய்வில் இருந்து மீண்டும் வந்து தன் நாட்டுக்காக கிரிக்கெட் ஆட இருப்பதாக பரபரப்பாக அறிவித்து இருக்கிறார்.
வெஸ்ட் இண்டீஸ் அணி டி20 உலகக்கோப்பைக்கு தயாராகி வரும் நிலையில், இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் பிராவோ.

சம்பள பிரச்சனை
டிவைன் பிராவோ வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்தார். 2014ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் நிர்வாகத்துடன் ஏற்பட்ட சம்பள பிரச்சனையால் அப்போது போராட்டத்தை கையில் எடுத்தார் பிராவோ.

வெளியேற்றம்
இந்தியா உடனான ஒருநாள் தொடரில் கேப்டன் பிராவோ தலைமையில் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் பாதியில் வெளியேறினர். அதன் பின், பிராவோ - வெஸ்ட் இண்டீஸ் நிர்வாகம் இடையே மோதல் போக்கு நீடித்து வந்தது.

உள்ளூர் டி20 லீக்
2016ஆம் ஆண்டுக்கு பின் பிராவோ வெஸ்ட் இண்டீஸ் அணியில் சேர்க்கப்படவில்லை. தொடர்ந்து பல நாடுகளின் உள்ளூர் டி20 லீக் தொடர்களில் பங்கேற்று வந்தார் பிராவோ.

சிஎஸ்கே அணியில் பிராவோ
தடையில் இருந்து மீண்டு வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தொடர்ந்து 2018 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் ஆடினார். 2020 ஐபிஎல் தொடரிலும் பிராவோ பங்கேற்க உள்ளார்.

ஓய்வு முடிவு
இனி வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக தம்மை தேர்வு செய்ய மாட்டார்கள் எனக் கருதி, இனி நாட்டுக்காக ஆட முடியாது என்ற முடிவுக்கு வந்த பிராவோ கடந்த ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்து இருந்தார்.

அதிகாரத்தில் மாற்றம்
இதற்கிடையே, வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அமைப்பின் அதிகாரத்தில் இந்த ஆண்டின் துவக்கத்தில் மாற்றம் ஏற்பட்டது. முன்னணி வெஸ்ட் இண்டீஸ் வீரர்களுடன் மோதல் போக்கை கடைபிடித்து வந்த டேவ் கேமரான் பதவி விலகி, முன்னாள் அணி மேலாளர் ரிக்கி ஸ்கெரிட் தலைவர் பதவியில் அமர்ந்தார்.

அணியில் சேர்ந்த வீரர்கள்
நிர்வாகத்தில் ஏற்பட்ட மாற்றத்தை அடுத்து அணியை விட்டு விலகி இருந்த பல வீரர்கள் மீண்டும் வெஸ்ட் இண்டீஸ் அணியை நோக்கி படை எடுத்தனர். கிறிஸ் கெயில், கீரான் பொல்லார்டு, சிம்மன்ஸ், தினேஷ் ராம்தின் என பலரும் மீண்டும் அணியில் இடம் பெற்றனர்.

டி20 உலகக்கோப்பை
இந்த நிலையில், டிவைன் பிராவோவும் தன் ஓய்வு முடிவை ரத்து செய்து விட்டு, டி20 உலகக்கோப்பையை மனதில் வைத்து மீண்டும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக ஆட இருப்பதாக அறிவித்துள்ளார்.

மீண்டும் அணிக்கு திரும்புவார்
தற்போது நடந்து முடிந்த இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரிலேயே பிராவோ இடம்பெறுவார் என முன்பு கூறப்பட்டு இருந்தது. எனினும், அவர் இந்த தொடரில் இடம்பெறவில்லை. இனி வரும் தொடர்களில் பிராவோ அணிக்கு திரும்புவார் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications