லலித் மோடியை இங்கிலாந்திலிருந்து தூக்கி வருகிறது அமலாக்கப் பிரிவு.. கோர்ட் அனுமதி கிடைத்தது!
மும்பை: இங்கிலாந்தில் பதுங்கி வாழ்ந்து வரும் லலித் மோடியை அங்கிருந்து நாடு கடத்திக் கொண்டு வர மும்பை கோர்ட் ஒன்று மத்திய அமலாக்கப் பிரிவுக்கு அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து அமலாக்கப் பிரிவு அது தொடர்பான பணிகளை முடுக்கி விட்டுள்ளது.
ஐபிஎல் தலைவராக இருந்தவர் லலித் மோடி. இவர் மீதும், மேலும் சிலர் மீதும் பண மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆனால் ஐபிஎல் தலைவர் பதவியிலிருந்து அகற்றப்பட்ட கையோடு லண்டனுக்கு ஓடிப் போய்விட்டார் லலித் மோடி.
அவரை இந்தியாவுக்குக் கொண்டு வர மத்திய பாஜக அரசு எந்த முயற்சிசையும் எடுக்கவில்லை. லலித் மோடிக்கு, மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜின் பூரண ஆதரவு இருப்பதாகவும் சில மாதங்களுக்கு முன்பு பெரும் சர்ச்சை எழுந்ததும் நினைவிருக்கலாம்.

நாடு கடத்தல்
இந்த நிலையில் மோடியை இங்கிலாந்திலிருந்து நாடு கடத்திக் கொண்டு வர மும்பையில் உள்ள சிறப்பு நீதிமன்றம், அமலாக்கப் பிரிவுக்கு அனுமதி அளித்துள்ளது.

இன்டர்போல் வேஸ்ட்
இன்டர்போல் மூலம் லலித் மோடியைக் கொண்டு வரும் முயற்சிகள் பலன் அளிக்காமல் போனதால் தற்போது கோர்ட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பான உத்தரவை நீதிபதி பவகே பிறப்பித்துள்ளார். மேலும், மோடிக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்ட்டையும் அவர் பிறப்பித்துள்ளார்.

வெளியுறவுத்துறை மூலமாக
தற்போது நாடு கடத்திக் கொண்டு வரும் உத்தரவு கிடைத்திருப்பதால் இதை வைத்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மூலமாக இங்கிலாந்து அரசைத் தொடர்பு கொண்டு லலித் மோடியை இங்கு தூக்கி வர முடியும் என அமலாக்கப் பிரிவு நம்புகிறது. ஆனால் இந்த உத்தரவை வெளியுறவுத்துறை அமைச்சகம், இங்கிலாந்து அரசிடம் கொண்டு போகும் வரை அதே இங்கிலாந்தில்தான் லலித் மோடி தங்கியிருப்பாரா என்பது சந்தேகம்தான். நிச்சயம் அங்கிருந்து கிளம்பிப் போகும் வாய்ப்புகள் நிறையவே உள்ளன.

பண மோசடி வழக்கு
2009ம் ஆண்டு நடந்த ஐபிஎல் போட்டியின் போது டிவி ஒளிபரப்பு உரிமையை வழங்கியதில் மிகப் பெரிய அளவில் லலித் மோடி பண மோசடி செய்ததாக பிசிசிஐ குற்றம் சாட்டியது. இதுதொடர்பாக சென்னையில் வழக்கும் பதிவானது. ஆனால் விசாரணைக்கு வராமல் டபாய்த்துக் கொண்டுள்ளார் லலித் மோடி.

கேள்வி மட்டும் கேட்ட இன்டர்போல்
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் லலித் மோடிக்கு எதிராக இன்டர்போல் மூலம் ரெட் கார்னர் நோட்டீஸும் பிறப்பிக்கப்பட்டது. ஆனாலும் அவரைப் பிடிக்க முடியவில்லை. காரணம், இந்த வழக்கு தொடர்பாக பல்வேறு தகவல்களை இன்டர்போல் தொடர்ந்து அமலாக்கப் பிரிவிடம் கேட்டுக் கொண்டே இருந்ததால்.

சீனிவாசன் போட்ட வழக்கு
இதனால்தான் தற்போது நாடு கடத்திக் கொண்டு வரும் உத்தரவை மும்பை கோர்ட்டிலிருந்து அமலாக்கப் பிரிவு பெற்றுள்ளது. பிசிசிஐ முன்னாள் தலைவர் சீனிவாசன் கொடுத்த புகாரின் பேரில் கடந்த 2012ம் ஆண்டு லலிதா மோடி மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. லலித் மோடி மீது 420, 120பி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.


Click it and Unblock the Notifications