கிரிக்கெட் இல்லாத சச்சின்... உணர்ச்சிப் பெருக்கில் மனைவி அஞ்சலி
மும்பை: கிரிக்கெட் விளையாட்டு இல்லாத சச்சினை தன்னால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை என்று அவரது மனைவி அஞ்சலி டெண்டுல்கர் உணர்ச்சிப் பெருக்கோடு பேசியுள்ளார்.
சச்சின் டெண்டுல்கர் தனது 200 வது டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெற்றார். மும்பை வாங்க்டே மைதானத்தில் கண்ணீருடன் விடைபெற்ற அவருக்கு ரசிகர்கள் பிரியா விடை கொடுத்தனர்.
அவரின் 24 ஆண்டுகால கிரிக்கெட் சகாப்தம் இன்றுடன் முடிவுக்கு வந்தது. இந்நிலையில் சச்சினின் ஓய்வு குறித்து அவரது மனைவி அஞ்சலி டெண்டுல்கர்,செய்தியாளர்களிடம் பேசினார்.

கிரிக்கெட்தான் கடவுள்
சச்சினைப் பொறுத்த வரை கிரிக்கெட்தான் கடவுள், கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அவருக்கு மட்டுமின்றி எங்களுக்கும் சற்று கடினமாக உள்ளது.

ஓய்விற்குப் பின்னர்
"ஓய்வுக்கு பிறகு சச்சினின் வாழ்க்கையை நினைத்து பார்த்தால் வித்தியாசமாக தோன்றுகிறது. கிரிக்கெட் இல்லாத சச்சினை நினைத்து கூட பார்க்க முடியவில்லை.

தன்னம்பிக்கை நாயகன்
அவரது ஓய்வு பற்றி பல பேர் விமர்சனம் செய்தாலும், தன்னால் 100 சதவீதம் கிரிக்கெட்டில் கவனம் செலுத்த முடியும் என்று தன்னம்பிக்கையுடன் இருந்தார்.

மனம் சொன்னதை கேட்டார்
தன்னுடைய மனம் எப்போது ஓய்வை பற்றி நினைக்கிறதோ அன்றைய தினம் தான் கிரிக்கெட்டில் ஓய்வு பெறுவதாக என்னிடம் கூறினார். ஒருநாள் நானும் அவரும் பேசிக் கொண்டிருந்த போது, தன்னுடைய 200வது டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெறுவதாக என்னிடம் கூறினார்.

ரசிகர்களுக்கு நன்றி
கடந்த மாதம் அவர் ஓய்வு பெறப்போவதைப் பற்றி அறிவித்தார். இந்த ஒரு மாதகாலமும் சற்று வித்தியாசமானதாகத்தான் இருந்தது. சச்சினின் முடிவை நானும் மதித்தேன். அவரை உண்மையாக நேசித்த அனைத்து ரசிகர்களும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்".

கண்ணீரை மறைத்தேன்
இறுதிப் போட்டி உணர்ச்சிமயமானதாக இருந்தது. என் கண்களில் வழிந்த கண்ணீரை கூலிங்கிளாஸ் போட்டு மறைத்தேன். என்ன இருந்தாலும் உணர்ச்சியை மறைக்க கூடாது இல்லையா?

அர்ஜூன் டெண்டுல்கர்
தனது தந்தையின் கடைசி போட்டியை மிஸ் செய்யக்கூடாது என்று அர்ஜூன் நினைத்தான். அதனால்தான் பால் பாய் ஆக பணிபுரிந்தான். மகள் சாரா உணர்ச்சிகளை வெளிக்காட்டமாட்டாள். ஆனால் இன்றைய தினம் அவளும் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் இருந்தாள் என்றார் அஞ்சலி.


Click it and Unblock the Notifications