லண்டன்: இந்தியாவில் அடுத்த மாதம் தொடங்கும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பங்கேற்பது பாதுகாப்புக்கு உகந்ததல்ல என்று இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்களுக்கு அந்த நாட்டு பாதுகாப்பு நிபுணர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளனர். இதனால் இங்கிலாந்து வீரர்கள் ஐபிஎல் தொடரில் பங்கேற்பார்களா என்பதில் கேள்விக்குறி எழுந்துள்ளது.
ஐபிஎல் அணிகளில் 7 இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் அடுத்த மாதம் தொடங்கவுள்ள ஐபிஎல் தொடரில் பங்கேற்க ஆயத்தமாக உள்ளனர்.
இந்த நிலையில், சமீபத்தில் எந்த வெளிநாட்டு விளையாட்டு வீரர்களும், அணிகளும் இந்தியாவுக்கு வரக் கூடாது. மீறி வந்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என இலியாஸ் காஷ்மீரி என்ற பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி தீவிரவாதத் தலைவன் எச்சரித்தான்.
இதையடுத்து இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் சங்கம் இதுகுறித்து பாதுகாப்பு ஆலோசகர்களிடம் கருத்து கேட்டிருந்தது. அந்த ஆலோசர்கள், இந்தியாவுக்கு இப்போது போவது சரியாக இருக்காது என்று அறிக்கை கொடுத்துள்ளதாம்.
ரெக் டிக்கன்சன் தலைமையிலான பாதுகாப்பு நிபுணர்கள் இந்த ஆய்வறிக்கையை சமர்ப்பித்துள்ளனர். இதேபோல ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர்கள் சங்கமும் பாதுகாப்பு தொடர்பான ஆய்வறிக்கையை கோரியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய பாதுகாப்பு எச்சரிக்கையால், இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்பார்களா என்பது சந்தேகமாகியுள்ளது.