கிறைஸ்ட்சர்ச்: டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இமாலய சாதனையை படைத்து, சச்சின் டெண்டுல்கரின் நீண்ட கால சாதனையையும் முறியடித்து இருக்கிறார் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட். அவர் நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் 15 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து இருந்தபோது இந்த சாதனையை செய்தார்.
இதன் மூலம் அவர் டெஸ்ட் போட்டிகளின் நான்காவது இன்னிங்ஸில் மட்டும் அதிக ரன் சேர்த்த வீரர் என்ற வரலாற்று சாதனையை படைத்து இருக்கிறார். முன்னதாக சச்சின் டெண்டுல்கர் டெஸ்ட் போட்டிகளின் நான்காவது இன்னிங்ஸ்களில் மட்டும் 1625 ரன்கள் எடுத்து இருந்தார்.

அந்த சாதனையை முறியடித்து இருக்கும் ஜோ ரூட் 49 இன்னிங்ஸ்களில் 1630 ரன்களை எடுத்து இருக்கிறார். சச்சின் டெண்டுல்கர் 60 இன்னிங்ஸ்களில் 1625 ரன்கள் எடுத்த நிலையில் ஜோ ரூட் 49 இன்னிங்ஸ்களில் அந்த சாதனையை முறியடித்து இருக்கிறார்.
டெஸ்ட் போட்டிகளின் கடைசி இன்னிங்ஸில் ரன் குவிப்பது என்பது மிகவும் கடினமான விஷயமாகும். அப்போது பிட்ச் சேதம் அடைந்து இருக்கும் என்பதால் பேட்டிங் செய்வது கடினமாக இருக்கும். இந்த சூழ்நிலையில் ஜோ ரூட் செய்துள்ள இந்த சாதனை வரலாற்று சிறப்புமிக்க சாதனையாக மாறி உள்ளது.
மேலும் தனது 150 வது டெஸ்ட் போட்டியில் இந்த வரலாற்று சாதனையை அவர் நிகழ்த்தி இருக்கிறார். இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் டக் அவுட் ஆன நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் 104 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடியபோது அதிரடியாக 15 பந்துகளில் 23 ரன்கள் சேர்த்து அணியின் வெற்றியை உறுதி செய்து இருந்தார் ஜோ ரூட்.
தற்போது சச்சின் டெண்டுல்கரின் அதிக டெஸ்ட் ரன் சாதனையை ஜோ ரூட் நெருங்கி வருவது குறிப்பிடத்தக்கது. சச்சின் டெண்டுல்கர் 15,921 டெஸ்ட் ரன்களை எடுத்து இருக்கிறார். ஜோ ரூட் 12,777 ரன்கள் எடுத்து இருக்கிறார். ஜோ ரூட் இன்னும் 3144 ரன்கள் எடுத்தால் சச்சினின் சாதனையை சமன் செய்ய முடியும்.