லண்டன்: இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிக்க இங்கிலாந்து நட்சத்திர வீரர் ஜோ ரூட்டிற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த வீரர்களுக்கான பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் முதல் இடத்தில் இருக்கும் நிலையில், ஜோ ரூட் 7வது இடத்தில் இருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதல் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 358 ரன்களை குவித்துள்ளது. இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் அதிகபட்சமாக 206 பந்துகளில் 18 பவுண்டரிகள் உட்பட 143 ரன்களை விளாசி அசத்தினார்.

கடந்த 4 ஆண்டுகளில் ஜோ ரூட் அடிக்கும் 16வது சதம் இதுவாகும். மொத்தமாக இது 33வது சதமாகும். இது இந்திய ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் ஒவ்வொரு டெஸ்ட் போட்டியிலும் ஜோ ரூட்டின் பேட்டிங் ஃபார்ம் அதிகரித்து கொண்டே போகிறது. 2021ஆம் ஆண்டு ஜோ ரூட் 17 சதங்களை மட்டுமே அடித்திருந்த நிலையில், 4 ஆண்டுகளில் 16 சதங்கள் அடித்து 33 சதங்களை எட்டியுள்ளார்.
இதன் மூலமாக ஃபேஃப் 4 வீரர்கள் இடையிலான போட்டியில் ஜோ ரூட் யாரும் எட்ட முடியாத தூரத்திற்கு உயர்ந்துள்ளார். இதுவரை 145 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஜோ ரூட் 33 சதங்கள், 64 அரைசதங்கள் உட்பட 12,274 ரன்களை விளாசி இருக்கிறார். இதன் மூலமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் ஜோ ரூட் 7வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
இந்தப் பட்டியலில் முதலிடத்தில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 15,921 ரன்களுடன் முதலிடத்தில் இருக்கிறார். 2வது இடத்தில் ரிக்கி பாண்டிங் 13,378 ரன்களுடனும், 3வது இடத்தில் காலிஸ் 13,289 ரன்களுடனும், ராகுல் டிராவிட் 13,288 ரன்களுடன் 4வது இடத்திலும், குக் 12,472 ரன்களுடன் 5வது இடத்திலும், சங்கக்காரா 12,400 ரன்களுடன் 6வது இடத்திலும் இருக்கின்றனர்.
சச்சின் டெண்டுல்கர் மற்றும் ஜோ ரூட் இடையிலான வித்தியாசம் வெறும் 3,647 ரன்களாக மட்டுமே உள்ளது. அதுமட்டுமல்லாமல் ஜோ ரூட்டிற்கு வெறும் 33 வயது மட்டுமே ஆவதால், இன்னும் 4 முதல் 5 ஆண்டுகள் வரை டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாடலாம். இதனால் எளிதாக சச்சின் டெண்டுல்கரின் சாதனையை எளிதாக முறியடிக்க முடியும் என்று பார்க்கப்படுகிறது.
அதேபோல் சச்சின் டெண்டுல்கரின் இந்த சாதனை மட்டுமல்லாமல், அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற சாதனையை ஜோ ரூட் முறியடிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 200 டெஸ்ட் போட்டிகளில் சச்சின் டெண்டுல்கர் விளையாடியுள்ள நிலையில், ஜோ ரூட் 145 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். இதிலும் இருவருக்கும் வெறும் 55 டெஸ்ட் போட்டிகள்ன் மட்டுமே வித்தியாசம் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலமாக சச்சின் டெண்டுலகரின் 2 சாதனையையும் ஜோ ரூட் நிச்சயம் முறியடிப்பார் என்று ரசிகர்களும் எதிர்பார்த்துள்ளனர்.