147 வருட டெஸ்ட் வரலாற்றில் முதல்முறையாக மாபெரும் சாதனை செய்த இங்கிலாந்து அணி.. வெஸ்ட் இண்டீஸ் காலி
நாட்டிங்ஹாம்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது. நாட்டிங்ஹாம் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் இங்கிலாந்து அணி அபாரமாக பேட்டிங் செய்து 147 வருட கிரிக்கெட் வரலாற்றில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் 400 ரன்களை தாண்டி மாபெரும் சாதனை ஒன்றை செய்துள்ளது. மேலும், மூத்த வீரர் ஜோ ரூட் சதம் அடிப்பதில் புதிய சாதனை ஒன்றை சமன் செய்துள்ளார். இதை அடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி தோல்வியை நோக்கி சென்று கொண்டுள்ளது.
முன்னதாக நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் அந்த அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஒரு இன்னிங்க்ஸ் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. அடுத்து நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்ஸில் 416 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் ஓலி போப் 121 ரன்களும், பென் டக்கெட் 71 ரன்களும், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 69 ரன்களும் எடுத்து இருந்தனர்.

இதற்கு பதிலடி கொடுத்த வெஸ்ட் இண்டீஸ் அணி தனது முதல் இன்னிங்ஸில் 457 ரன்கள் குவித்தது. அந்த அணியின் கேப்டன் கிரைக் பிராத்வைட் 48 ரன்களும், ஆலிக் ஆதான்சே 82 ரன்களும், ஜோஸ்வா டி சில்வா 82 ரன்களும், காவம் ஹாட்ஜ் 120 ரன்களும் எடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்ஸில் 41 ரன்கள் முன்னிலை பெற்றது. இதை அடுத்து, இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கை ஓங்கியதாகவே அனைவரும் எண்ணினர்.
ஆனால், இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி சிறப்பாக பேட்டிங் ஆடி பதிலடி கொடுத்தது. இரண்டாவது இன்னிங்ஸில் பென் டக்கெட் 76 ரன்களும், ஓலி போப் 51 ரன்களும் எடுத்தனர். மூத்த வீரர் ஜோ ரூட் 122 ரன்கள் குவித்தார். அதிரடியாக ஆடிய ஹாரி ப்ரூக் 132 பந்துகளில் 109 ரன்கள் குவித்தார். இதை அடுத்து இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 425 ரன்கள் எடுத்தது.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 385 ரன்கள் என்ற கடினமான வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இரண்டு இன்னிங்ஸ்களிலும் 400 ரன்கள் குவித்த இங்கிலாந்து அணி மாபெரும் சாதனை படைத்தது. 1877 ஆம் ஆண்டு முதல் டெஸ்ட் கிரிக்கெட் ஆடி வரும் இங்கிலாந்து அணி, இந்த 147 ஆண்டுகள் கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக இரண்டு இன்னிங்ஸ்களிலும் 400 ரன்களை தாண்டி ரன் குவித்து இருக்கிறது.
மேலும், இதுவரை 1073 டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணி விளையாடி உள்ளது. ஆனால், அதில் ஒரு முறை கூட இரண்டு இன்னிங்ஸ்களிலும் 400 ரன்களை தாண்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், உலக அளவில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் 400 ரன்களை தாண்டிய 12வது போட்டியாக இது அமைந்தது. இதற்கு முன் 11 போட்டிகளில் இது போல ஒரு அணி இரண்டு இன்னிங்ஸ்களிலும் 400 ரன்களை தாண்டி உள்ளது. அதில் ஐந்து முறை இங்கிலாந்து அணிக்கு எதிராக அந்த சாதனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த போட்டியில் மூத்த வீரர் தனது 32 வது டெஸ்ட் சதத்தை அடித்து இருந்தார். தற்போது கிரிக்கெட் ஆடி வரும் வீரர்களிலேயே அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் கேன் வில்லியம்சன் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரின் சாதனையை ஜோ ரூட் சமன் செய்துள்ளார். இவர்கள் மூவரும் தற்போது 32 டெஸ்ட் சதங்களை அடித்து உள்ளனர். இவர்களுக்கு அடுத்து தற்போது ஆடி வரும் வீரர்களில் நான்காவது இடத்தில் இருப்பவர் இந்திய அணியின் விராட் கோலி ஆவார். அவர் 29 டெஸ்ட் சதங்கள் மட்டுமே அடித்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications