சச்சினின் மெகா ரெக்கார்டை முறியடிக்கப் போவது இந்த இங்கிலாந்து வீரர் தான்.. மைக்கேல் வாகன் கணிப்பு
லண்டன்: சமீபத்தில் நடந்து முடிந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் மூத்த வீரர் ஜோ ரூட் 122 ரன்கள் குவித்து தனது 32வது டெஸ்ட் சதத்தை நிறைவு செய்து இருந்தார். அதன் மூலம் அவர் பல்வேறு சாதனைகளை நிகழ்த்திய நிலையில், அவர் சச்சினின் அதிக டெஸ்ட் ரன்கள் குவித்த சாதனையை முறியடிப்பார் என முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் கூறி இருக்கிறார்.
தற்போது ஜோ ரூட் 142 டெஸ்ட் போட்டிகளில் 260 இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்து 11940 ரன்கள் குவித்து இருக்கிறார். அவர் அதிக டெஸ்ட் ரன்கள் குவித்த வீரர்கள் வரிசையில் எட்டாவது இடத்துக்கு முன்னேறி இருக்கிறார். சச்சின் டெண்டுல்கர் 329 இன்னிங்ஸ்களில் 15921 ரன்கள் எடுத்துள்ளார். அந்த சாதனையை இதுவரை எந்த ஒரு வீரரும் முறியடிக்கவில்லை.

அதிக டெஸ்ட் ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கும் ரிக்கி பாண்டிங் 13378 ரன்களும், மூன்றாவது இடத்தில் இருக்கும் ஜேக்கஸ் காலிஸ் 13289 ரன்களும் குவித்துள்ளனர். தற்போது ஜோ ரூட்டுக்கு 33 வயது ஆகிறது. அவரால் இன்னும் ஐந்து ஆண்டுகள் வரை கிரிக்கெட் விளையாட முடியும் என வைத்துக் கொண்டாலும் அவர் நிச்சயமாக சச்சினின் சாதனையை முறியடிக்க அதிக வாய்ப்பு உள்ளது.
தற்போது இங்கிலாந்து அணி அதிரடியாக பேட்டிங் ஆடும் பாணியை டெஸ்ட் போட்டிகளில் கடைபிடித்து வருகிறது. இடையே ஜோ ரூட் அந்த பாணிக்கு மாறினார். அது அவருக்கு சரியாக அமையவில்லை. அதனால், அவர் தற்போது மீண்டும் நிதான ஆட்டம் ஆடும் பாணிக்கு திரும்பி இருக்கிறார். இதை அடுத்து அவர் தொடர்ந்து சிறப்பாக ரன் குவித்து வருகிறார்.
இதேபோல் அவர் விளையாடினால் நிச்சயமாக சச்சினின் அதிக டெஸ்ட் ரன் குவித்த சாதனையை முறியடிக்க வாய்ப்புள்ளது என மைக்கேல் வாகன் சுட்டிக்காட்டி இருக்கிறார். தற்போது இங்கிலாந்து அணிக்காக அதிக ரன்கள் குவித்த வீரராக அலஸ்டர் குக் இருக்கிறார். அவர் 12472 ரன்கள் சேர்த்துள்ளார். அந்த சாதனையை இன்னும் ஓராண்டுக்குள் ஜோ ரூட் முறியடிப்பார் எனவும் மைக்கேல் வாகன் கணித்து இருக்கிறார்.


Click it and Unblock the Notifications