24 பவுண்டரி, 0 சிக்ஸ் அடித்து 167 ரன் எடுத்து ODI வரலாறு படைத்த இங்கிலாந்து வீரர் பென் டக்கெட்!
லாகூர்: பாகிஸ்தானில் நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான முத்தரப்பு ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து தொடக்க வீரர் பென் டக்கெட், ஒரு சிக்சர் கூட அடிக்காமல் 167 ரன்கள் குவித்து புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளார். அவரது இந்த காட்டடி ஆட்டத்தால் இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 386 ரன்கள் என்ற பிரம்மாண்ட ஸ்கோரை குவித்தது.
இலங்கை பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்த பென் டக்கெட், 132 பந்துகளில் 24 பவுண்டரிகளை விரட்டினார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு சிக்சர் கூட அடிக்காமல் ஒரு பேட்டர் அடித்த 2-வது அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். கடந்த 2016-ல் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் சிக்சர் இன்றி 173 ரன்கள் குவித்ததே உலக சாதனையாக உள்ளது. வார்னரும் தனது இன்னிங்ஸில் 24 பவுண்டரிகள் அடித்திருந்தார். தற்போது டக்கெட்டும் 24 பவுண்டரிகளுடன் 126.51 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடி இந்த மைல்கல்லை எட்டியுள்ளார்.

பாகிஸ்தானில் நடந்து வரும் முத்தரப்பு ஒருநாள் தொடரில் தொடர்ச்சியாக 2 சதங்களை விளாசியுள்ள பென் டக்கெட், லாகூர் கடாபி மைதானத்தில் மட்டும் தனது 3-வது சதத்தைப் பதிவு செய்தார். இதன் மூலம் இந்த மைதானத்தில் 3 ஒருநாள் சதங்களை அடித்த முதல் வெளிநாட்டு வீரர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்தார். மேலும், பாகிஸ்தான் மண்ணில் அதிக ஒருநாள் சதங்கள் அடித்த வெளிநாட்டு வீரர்கள் பட்டியலில் சனத் ஜெயசூர்யா மற்றும் குமார் சங்கக்காராவின் சாதனையை (3 சதங்கள்) இவர் சமன் செய்தார். பாகிஸ்தானில் இரண்டு முறை 150 ரன்களுக்கு மேல் குவித்த முதல் சர்வதேச வீரரும் இவரே ஆவார்.
லாகூர் மைதானத்தில் 4 போட்டிகளில் விளையாடியுள்ள டக்கெட் 118.75 சராசரியுடன் 475 ரன்கள் குவித்துள்ளார். இந்த மைதானத்தில் 400 ரன்களுக்கு மேல் அடித்த வெளிநாட்டு வீரர்களில் இந்திய ஜாம்பவான் தோனி மட்டுமே 134.66 சராசரியுடன் டக்கெட்டை விட முன்னிலையில் உள்ளார். பாகிஸ்தான் மண்ணில் இதுவரை 7 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 81.85 சராசரியுடன் 573 ரன்கள் குவித்துள்ள டக்கெட், இங்கும் தோனிக்கு அடுத்த இடத்தில் ஆதிக்கம் செலுத்துகிறார்.


Click it and Unblock the Notifications

