
இஷாந்த் ஷர்மா அவுட்
இந்த நிலையில், நேற்று (ஆக.15) நான்காம் நாள் ஆட்டம் நடைபெற்றது. இதில், இந்திய அணி தனது 2வது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது. நேற்றைய ஆட்ட நேர முடிவில், இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்துள்ளது. அஜின்க்யா ரஹானே 61 ரன்களும், புஜாரா 45 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழந்தனர். கேப்டன் விராட் கோலி 20 ரன்கள் மட்டும் எடுத்து வெளியேறினார். தற்போது ரிஷப் பண்ட் 14 ரன்களுடனும், இஷாந்த் ஷர்மா 4 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி 154 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இந்த சூழலில், இன்று (ஆக.16) ஐந்தாவது மற்றும் கடைசி நாள் ஆட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே ஓலே ராபின்சன் ஓவரில் ரிஷப் பண்ட் 22 ரன்களிலும், இஷாந்த் ஷர்மா 16 ரன்களிலும் வெளியேறினார்கள். கைவசம் இன்னும் 2 விக்கெட்டுகளே மீதமுள்ளன. எனினும், இந்தியா இப்போது 200 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. எப்படியாவது மேற்கொண்டு கூடுதலாக 20 ரன்கள் அடித்தால், 220 - 230 ரன்கள் முன்னிலைப் பெறலாம். அப்படி அடிக்கும் பட்சத்தில் ஓரளவுக்கு இந்திய பவுலர்கள் வெற்றிக்காக போராட வாய்ப்புள்ளது. உண்மையை சொல்ல வேண்டுமெனில், நேற்று நான்காம் நாள் ஆட்டத்தில் புஜாராவும், ரஹானேவும் போராடவில்லை எனில், இந்தியா நேற்றே ஆல் அவுட் ஆகியிருக்கும். 206 பந்துகளை சந்தித்து புஜாரா 45 ரன்களும், 146 பந்துகளை சந்தித்து ரஹானே 61 ரன்களும் எடுத்தனர். இருவரும் சேர்ந்து 352 பந்துகளை சந்தித்தனர். அதாவது 58 + ஓவர்கள் முழுதாக நின்றிருக்கிறார்கள். உண்மையில் நாம் எழுந்து நின்று கைத்தட்ட வேண்டும். சமீபத்திய டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடாத இருவரும், இங்கிலாந்தின் வெற்றி வாய்ப்பை தங்களால் முடிந்த அளவுக்கு தள்ளிப்போட்டனர்.

பவுன்ஸ் தாக்குதல்
இந்நிலையில், இஷாந்த் ஷர்மா அவுட்டான பிறகு களத்திற்குள் வந்த ஜஸ்ப்ரித் பும்ராவை இங்கிலாந்து வீரர்கள் படாதபாடு படுத்தி வருகின்றனர். பவுன்சர் பந்துகளால். ஆம்! இந்த டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டத்தில், இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது, அந்த அணியின் சீனியர் பவுலர் ஜேம்ஸ் ஆண்டர்சன் பேட்டிங் செய்ய வந்த போது, இந்தியாவின் பும்ரா ஒரே ஓவரில் தொடர்ந்து பவுன்சர் பந்துகள் போட்டு தாக்குதல் நடத்தினர். இதில், ஆண்டர்சன் எசக்குபிசகாக அடியும் வாங்கினார். அதுவும் பட்ட காலிலே படும் என்பது போல், தொடர்ந்து தோள்பட்டையில் அடி வாங்கிக் கொண்டிருந்தார். அப்போது, ஆண்டர்சனுக்கும் பும்ராவுக்கும் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டது. தொடர் பவுன்சர்களால் ரொம்பவே டென்ஷனான ஆண்டர்சன், அங்கேயே தனது கோபத்தை வார்த்தைகளால் வெளிப்படுத்தினார். இதில், கேப்டன் கோலியும் இணைந்து கொண்டு, "போவியா அங்கிட்டு" மோடில் ஆண்டர்சனை டீல் செய்ய, இங்கிலாந்து வீரர்கள் ஏகத்துக்கும் கடுப்பாகிவிட்டார்கள் போல.

வார்த்தை மோதல்
இந்நிலையில், இன்று 5வது நாள் ஆட்டம் தொடங்கிய போது, பண்ட், இஷாந்த் இருவரும் ஓலே ராபின்சன் ஓவரில் வெளியேறினார்கள். இதன் பிறகு களமிறங்கிய பும்ராவுக்கு மார்க் வுட், ராபின்சன் கூட்டணி கடுமையான பவுன்ஸ் பந்துகளை போட்டு அச்சுறுத்தியது. விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லரும் தன் பங்குக்கு பும்ராவை வார்த்தைகளால் வம்பிழுத்துக் கொண்டிருந்தார். ஒருக்கட்டத்தில் பொறுமையிழந்த பும்ரா, பதிலுக்கு பதில் வார்த்தை மோதலில் ஈடுபட களம் ரொம்பவே சூடானது. பிறகு ஷமி வந்து பும்ராவை சமாதானம் செய்ய முயன்றார். ஆனால், அப்போதும் கோபம் தணியாத பும்ரா தொடர்ந்து கோபமாக பேசிக் கொண்டே இருந்தார்.

நிலைகுலைந்த பும்ரா
அடுத்த ஓவரில், மார்க் வுட் மிக வேகமான பவுன்ஸ் பந்து ஒன்றை வீச, அந்த பும்ரா ஹெல்மெட்டை மிக பலமாக தாக்கியது. இதனால் ஒரு நொடி சற்றே பொறி கலங்கிப் போனார் பும்ரா. உடனடியாக இந்திய மருத்துவக் குழு வந்து பும்ராவை சோதித்தது. ஆனால், நல்வாய்ப்பாக அவருக்கு எந்த அடியும் படவில்லை. இரு அணி வீரர்களும் ரொம்பவே உக்கிரமாக மோதிக் கொண்டிருக்கிறார்கள் என்பது மட்டும் உண்மை. பும்ரா, பவுலிங்கில் இதனை திருப்பிக் கொடுக்க வேண்டும் என்பதே இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும். எனினும், சிறப்பாக விளையாடிய ஷமி - பும்ரா பார்ட்னர்ஷிப் 9வது விக்கெட்டுக்கு 77 ரன்களை குவித்தது. உணவு இடைவேளை வரை இந்திய அணி 259 ரன்கள் எடுத்து முன்னிலை பெற்றுள்ளது. ஷமி 67 பந்துகளில் 52 ரன்களும், பும்ரா 58 பந்துகளில் 30 ரன்களும் எடுத்து அமர்க்களப்படுத்தியுள்ளனர்.


Click it and Unblock the Notifications










