ஐபிஎல் தொடர்ல முழுசா இங்கிலாந்து வீரர்கள் கலந்துப்பாங்க... ஆனா நாட்டுக்காக விளையாடறது முக்கியம்!
லண்டன் :ஐபிஎல் 2021 தொடர் வரும் ஏப்ரல் 9ம் தேதி முதல் மே 30ம் தேதிவரை இந்தியாவின் 6 இடங்களில் நடத்தப்பட உள்ளதாக பிசிசிஐ நேற்றைய தினம் அறிவித்துள்ளது.
இதனிடையே, இந்த தொடரில் இங்கிலாந்து வீரர்கள் முழுமையாக பங்கேற்று விளையாடுவார்கள் என்று அணியின் கோச் கிறிஸ் சில்வர்வுட் தெரிவித்துள்ளார்.
வரும் ஜூன் 2ம் தேதி நியூசிலாந்துடன் 2 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து பங்கேற்று விளையாட திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

3 தொடர்கள்
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 3 வடிவங்களிலான தொடர்கள் அடுத்தடுத்து திட்டமிடப்பட்டுள்ள நிலையில் டெஸ்ட் தொடர் நடந்து முடிந்துள்ளது. அடுத்ததாக டி20 மற்றும் ஒருநாள் தொடர்கள் நடைபெறவுள்ளன. இதையடுத்து ஐபிஎல் 2021 தொடர் அடுத்த மாதம் 9ம் தேதி துவங்கவுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. மே மாதம் 30ம் தேதிவரை இந்த தொடர் நடைபெறவுள்ளது.

முழுமையாக பங்கேற்பார்கள்
இந்நிலையில் இந்த தொடர் முழுவதிலும் இங்கிலாந்து வீரர்கள் பங்கேற்று விளையாடுவார்கள் என்று அந்த அணியின் கோச் கிறிஸ் சில்வர்வுட் தெரிவித்துள்ளார். நியூசிலாந்து அணிக்கு எதிராக இங்கிலாந்து திட்டமிட்டுள்ள 2 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடர் ஜூன் 2ம் தேதி துவங்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சில்வர்வுட் உறுதி
அந்த டெஸ்ட் போட்டிக்கான அணியின் தேர்வு குறித்து இன்னும் ஆலோசனை மேற்கொள்ளப்படவில்லை என்று கூறியுள்ள சில்வர்வுட், ஆயினும் நாட்டிற்காக விளையாடுவதே மிகவும் முக்கியமானது என்றும் எதையும் எப்போதும் உடனடியாக மாற்றிக் கொள்வது கடினமானது என்றும் அவர் கூறியுள்ளார்.

நியூசிலாந்து முதல் போட்டி மிஸ்
செய்தியாளர்களிடம் பேசிய சில்வர்வுட் ஐபிஎல் நாக்-அவுட் சுற்றில் இங்கிலாந்து வீரர்கள் விளையாட விரும்பினால், நியூசிலாந்திற்கு எதிரான முதல் போட்டியை அவர்கள் மிஸ் செய்ய வேண்டிவரும் என்றும் குறிப்பிட்டுள்ளார். ஆயினும் தற்போதைய சூழலில் இங்கிலாந்து வீரர்கள் ஐபிஎல் தொடர் முழுவதும் விளையாட வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications