கொல்கத்தா: இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றிபெறுவதற்கு 338 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 44வது லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்த்து இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜாஸ் பட்லர் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன் மூலமாக கிட்டத்தட்ட பாகிஸ்தான் அணி அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற முடியாத நிலை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து இங்கிலாந்து அணி தரப்பில் மலான் - பேர்ஸ்டோவ் இணை களமிறங்கியது.

இவர்கள் இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய நிலையில், முதல் விக்கெட்டுக்கு 82 ரன்கள் சேர்க்கப்பட்டது. அப்போது டேவிட் மலான் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த நிலையில், சிறப்பாக ஆடிய பேர்ஸ்டோவ் அரைசதம் விளாசி அசத்தினார். இதன்பின் ஜோ ரூட் நிதானமாக விளையாடிய நிலையில், பேர்ஸ்டோவ் 59 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார்.
இதன்பின் ஜோ ரூட் - பென் ஸ்டோக்ஸ் இணைந்து பாகிஸ்தான் அணி பவுலர்களை வெளுத்து வாங்கினார்கள். தேவையான நேரத்தில் பவுண்டரிகளை விளாசி ரன் ரேட் குறையாமல் பார்த்து கொண்டனர். சிறப்பாக ஆடிய ஜோ ரூட் அரைசதம் கடந்த நிலையில், இன்னொரு பக்கம் பென் ஸ்டோக்ஸும் அரைசதம் கடந்து அசத்தினார். இதனால் இங்கிலாந்து அணியின் ஸ்கோர் 35 ஓவர்களிலேயே 200 ரன்களை கடந்தது.
இதனைத் தொடர்ந்து பென் ஸ்டோக்ஸ் அதிரடிக்கு திரும்ப, இங்கிலாந்து அணியின் ஸ்கோர் வேகமெடுத்தது. இதனால் 40 ஓவர்களிலேயே 240 ரன்கள் குவிக்கப்பட்டது. தொடர்ந்து அதிரடியாக ஆடிய பென் ஸ்டோக்ஸ் 84 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற, ஜோ ரூட் 60 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். இதனைத் தொடர்ந்து ஹாரி ப்ரூக் - பட்லர் கூட்டணி இணைந்து அதிரடியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது.
ஆனால் கடைசி நேரத்தில் பட்லர் 27 ரன்களிலும், ப்ரூக் 30 ரன்களிலும், மொயின் அலி 8 ரன்களிலும், வில்லி 15 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினார். இறுதியாக இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 337 ரன்கள் சேர்த்துள்ளது. பாகிஸ்தான் அணி தரப்பில் ஹாரிஸ் ராஃப் 3 விக்கெட்டுகளையும், ஷாகின் அப்ரிடி மற்றும் முகமது வாசிம் இருவரும் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.