கடைசியா கிடைத்த "லட்டு" வாய்ப்பு.. இங்கி., வைத்த "ஆப்பு" - "சாதனை செஞ்சுரி" அடித்தும் தோல்வி
பிர்மிங்காம்: கடைசியில் ஒரு லட்டு தின்ன ஆசைப்பட்ட பாகிஸ்தானுக்கு மீண்டும் ஒரு பெரிய ஆப்பு வைத்துவிட்டது இங்கிலாந்து.
Recommended Video
பாபர் அசம் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து, 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
ஏற்கனவே, நடந்த முதல் இரு போட்டிகளிலும் இங்கிலாந்து வெற்றிபெற்று தொடரைக் கைப்பற்றிவிட்டது.

முனைப்புடன் பாகிஸ்தான்
இந்நிலையில், ஆறுதல் போட்டியாக.. ஒரு சம்பிரதாய போட்டியாக மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று (ஜுலை.13) பிர்மிங்கமில் நடைபெற்றது. ஏற்கனவே தொடரை இழந்துவிட்டதால், ஒரு கை துணிச்சலாக பார்த்துவிடலாம் என்று களமிறங்கியது பாகிஸ்தான். மோசமான தோல்விகள் காரணமாக, ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்களும் பாகிஸ்தான் அணியை கடுமையாக விமர்சித்ததால், எப்படியாவது ஆறுதல் வெற்றிப் பெற்றுவிட வேண்டும் என்ற முனைப்பு பாகிஸ்தானிடம் இருந்தது. அதை நேற்றைய ஆட்டத்திலும் காண முடிந்தது.

நேர்த்தியான ஆட்டம்
இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீச்சை தேர்வு செய்ய, பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 331 ரன்கள் குவித்தது. அந்த அணியின் கேப்டன் பாபர் அசம் நேர்த்தியாக விளையாடி, 139 பந்துகளில் 158 ரன்கள் எடுத்தார். இதில், 14 பவுண்டரிகளும் 4 சிக்ஸர்களும் அடங்கும். அதேபோல், இமாம்-உல்-ஹக் 56 ரன்களும், ரிஸ்வான் 74 ரன்களும் எடுத்து பாபருக்கு பக்கபலமாக இருந்தனர்.

ஒயிட் வாஷ்
இதையடுத்து, 332 ரன்களை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணியில், ஜேம்ஸ் வின்ஸ் 102 ரன்களும், லெவிஸ் 77 ரன்களும் குவிக்க, 48வது ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 332 ரன்கள் எடுத்து அந்த அணி வெற்றிப் பெற்றது. ஷஹீன் அப்ரிடி, ஹசன் அலி என இவரது பவுலிங்கும் பெரிதாக எடுபடவில்லை. இதன் மூலம், 3 போட்டிகளையும் வென்று 3-0 என்று பாகிஸ்தானை ஒயிட் வாஷ் செய்தது இங்கிலாந்து அணி

மாஸ் ரெக்கார்டு
எனினும், ஒரு ஆறுதலாக பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசம் புதிய சாதனை ஒன்றை பதிவு செய்திருக்கிறார். அதாவது, குறைந்த ஒருநாள் போட்டிகளில் 14 சதம் விளாசிய என்ற பேட்ஸ்மேன் எனும் பெருமையை அவர் பெற்றுள்ளார். 26 வயதான பாபர் 81 போட்டிகளில் 14 சதங்களை அடித்திருக்கிறார். ஹசிம் ஆம்லா 84 போட்டிகளிலும், டேவிட் வார்னர் 98 போட்டிகளிலும், விராட் கோலி 103 போட்டிகளிலும் 14 சதங்களை நிறைவு செய்திருந்தனர்.


Click it and Unblock the Notifications