
காஸ்ட்லி வீரர்கள்
இன்றைய ஏலத்தில் 2வது காஸ்ட்லி வீரர் என்ற பெருமை கே.எல்.ராகுலுக்கு கிடைத்துள்ளது. அவரை பஞ்சாப் அணி ரூ.11 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. நடப்பு தென் ஆப்பிரிக்கா தொடரில் ராகுல் சொல்லிக்கொள்ளும்படி ரன் குவிக்கவில்லை என்றபோதிலும், அவருக்கு பணத்தை வாரி வழங்கியுள்ளது பஞ்சாப்.

மணிஷ் பாண்டே
ராகுலை போலவே மற்றொரு கர்நாடக வீரர் மணிஷ் பாண்டேவுக்கும் அடித்தது லக். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அவரை ஏலத்தில் எடுத்தது. முன்னதாக மும்பை மற்றும் கொல்கத்தாவுக்காக விளையாடிய அனுபவம் உள்ளவர் அவர்.

ஆஸி. பேட்ஸ்மேனுக்கு அடித்தது லக்
ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன், கிறிஸ் லைன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் ரூ.9.6 கோடிக்கு ஏலத்தில் வாங்கப்பட்டுள்ளார். இவர், கடந்த சீசனிலும் கொல்கத்தாவுக்காகத்தான் ஆடினார். அதிரடி நாயகன் என்பது இதற்கு காரணம்.

பவுலர்களில் முன்னிலை
உலகின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக உள்ள ஆஸ்திரேலியாவின் மிட்சேல் ஸ்டார்க் கொல்கத்தா அணியால் ரூ.9.4 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளார். தற்போதைய நிலையில், அனைத்து வகை கிரிக்கெட்டிலும் அச்சுறுத்தும் வேகப்பந்து வீச்சாளர் இவர் என்பதுதான் இந்த ரேட்டுக்கு காரணம்.

அதிரடி மேக்ஸ்வெல்
ஆஸ்திரேலியாவின் அதிரடி நாயகன் மேக்ஸ்வெல், ரூ.9 கோடிக்கு டெல்லி டேர்டெவில்ஸ் அணியால் வாங்கப்பட்டுள்ளார். இவர் முன்பு பஞ்சாப்புக்காக ஆடியவர். சமீபகாலமாக அதிரடி காட்டவில்லை என்றபோதிலும், மேக்ஸ்வெல்லுக்கு இது பெரிய அமவுண்ட்தான்.

ஆச்சரியம்
ரூ.9 கோடிக்கு ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணியால் வாங்கப்பட்டுள்ள ரஷித் கான் அனைவர் புருவத்தையும் உயரச் செய்தவர். ஏனெனில் அதிகம் அறியப்படாத ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்காக ஆடிவருபவர் ரஷித்கான்.

அண்ணன், தம்பி
இளம் வீரர் க்ருனால் பாண்ட்யாவை ரூ.8.8 கோடி கொடுத்து வாங்கிக்கொண்டது மும்பை இந்தியன்ஸ். இதன் மூலம், தனது சகோதரர் ஹர்திக் பாண்ட்யாவுடன் மும்பை அணிக்காக தொடர்ந்து தனது அதிரடியை காட்ட உள்ளார் ஆல்-ரவுண்டர் க்ருனால் பாண்ட்யா.

ராஜஸ்தான் அணி
சஞ்சு சாம்சன் ரூ.8 கோடி கொடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் வாங்கப்பட்டுள்ளார். இளம் வீரருக்கு ராஜஸ்தான் அணி கொடுத்த இந்த முக்கியத்துவமும் பலரையும் புருவம் உயர்த்த வைத்துள்ளது.

சென்னையின் காஸ்ட்லி வீரர்
சென்னை அணி ஒரு வீரருக்கு நடப்பு சீசனில் அதிகபட்சமாக செலவிட்டதென்றால் அது கேதர் ஜாதவுக்குத்தான். ரூ.7.8 கோடி கொடுத்து கேதர் ஜாதவை சிஎஸ்கே அணி வாங்கியுள்ளது. இவர் ஆல்ரவுண்டராக செயல்படுவதும் இதற்கு ஒரு காரணம்.

அஸ்வின் அசத்தல்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கைவிட்டாலும் கூட, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி அஸ்வினை ரூ.7.6 கோடிக்கு வாங்கியுள்ளது. எனவே அஸ்வினும் காஸ்ட்லியான வீரர்களில் ஒருவராக மாறியுள்ளார். உலகின் தலை சிறந்த ஸ்பின் பவுலராக இவர் செயல்பட்டு வருகிறார்.

இங்கிலாந்து பவுலர்
இங்கிலாந்தின் கிறிஸ் வோக்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியால் ரூ.7.4 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். முன்னதாக இவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஆடியவர். சிறந்த வேகப்பந்து வீச்சாளராகும்.

தினேஷ் கார்த்திக்
தமிழக வீரரான தினேஷ்கார்த்திக் ரூ.7.4 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார். பல்வேறு அணிகளுக்கும் மாறியபடி உள்ள ஒரு வீரர் என்றபோதிலும், அவருக்கான மதிப்பு குறையவில்லை.


Click it and Unblock the Notifications
