லண்டன்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்து, 318 ரன்கள் பின் தங்கியுள்ளது. ஆஸ்திரேலியாவின் ஆதிக்கம் தொடந்து வரும் நிலையில், இந்திய ரசிகர்கள் இந்திய பேட்ஸ்மேன்களை கலாய்க்கும் வகையில் மீம்ஸ் வெளியிட்டு வருகின்றனர்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் 2ம் நாள் ஆட்டத்தில் இந்திய அணியின் பேட்டிங்கின் போது டாப் ஆர்டர் வீரர்கள் ஒருவர் கூட 15 ரன்களை தாண்டவில்லை. இதனால் 71 ரன்களுக்கு இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்தது. இதனை கலாய்க்கும் வகையில், பிதாமகன் படத்தில் வரும் சூர்யா ஜெயிலில் உள்ள சாமியாரை பார்த்து சொல்வது போல், இந்திய அணியை பார்த்து ரசிகர்கள், "அது எப்புட்றா.. நீங்க ஆடும் போது மட்டும் பவுலிங் பிட்ச்சா மாறிடுது" கேட்பதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் வேற லெவல்.

சூர்யாவின் உன்னை நினைத்து படத்தில் போலி ஜோசியராக வரும் சார்லி இறந்து போன ஜாதகருக்கு ஜோசியம் சொல்லி மாட்டிக் கொள்வார். அப்போது சிங்கமுத்து தனது மகனிடம், "நான் அப்போவே சொன்னேன்.. இந்த ஆளு ஒரு டுபாக்கூறுனு.. நம்பாதேனு சொன்னேன்.. என் பேச்ச கேட்காம உன்னைய பார்க்க கூட்டிட்டு வந்தான்" என்று சொல்லுவார். அதனை அப்படியே கிரிக்கெட் பார்த்த தந்தை தன் மகனிடம், "ஐசிசி இறுதிப்போட்டி வந்தால்லே சோக் ஆய்டுவாங்க.. உங்கள நம்பாதனு சொன்னேன்.. இவன்தான் என் பேச்சக் கேட்காமல் என்னையும் மேட்ச் பாக்க வச்சான்" என்று இந்திய அணியை பார்த்து சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் வெறித்தனம்.

அதேபோல் ஐசிசி லீக் போட்டிகளில் சிறப்பாக ஆடும் இந்திய அணி, நாக் அவுட் போட்டிகள் என்றால் மோசமாக விளையாடுவதை வழக்கமாக வைத்துள்ளது. இதனை கிண்டல் செய்யும் வகையில், ஐசிசி லீக் போட்டியில் ஆடும் போது கம்பீரமாக நிற்கும் கைப்புள்ள வடிவேலுவாகவும், நாக் அவுட் போட்டிகள் என்றால் ரியாஸ் கானிடம் அடி வாங்கி நடந்து வரும் வடிவேலுவாகவும் மாற்றி உருவாக்கப்பட்டுள்ள மீம் அசத்தல்.

இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில் களம் புகுந்த ஜடேஜா அதிரடியாக ஆடி 48 ரன்களை விளாசினார். இதனை பாராட்டும் வகையில் அவெஞ்சர்ஸ் படத்தில் வரும் தானோஸ் கதாபாத்திரம், அயர்ன் மேனிடம், "You Have M Respect" என்று சொல்வதாக ஒரு காட்சி இருக்கும். அதை ரசிகர்கள் ஜடேஜாவுக்கு மாற்றி பாராட்டும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள மீம் கலக்கல்.