லண்டன் : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி தடுமாறுவதற்கு காரணம் ஐபிஎல் தொடரின் ஆதிக்கம் தான் என்று ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இங்கிலாந்தில் நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு இந்திய அணி வீரர்கள் 10 நாட்களுக்கு முன்பு குழு, குழுவாக வந்தனர்.
இதில் ஐபிஎல் இறுதிப் போட்டியில் விளையாடிய சுப்மன் கில், ஜடேஜா, முகமது சமி ஆகியோரெல்லாம் ஜூன் மாதம் ஒன்றாம் தேதி தான் இங்கிலாந்து வந்து அடைந்தனர். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போன்ற பெரிய தொடரில் விளையாடுவதற்கு இந்திய அணி வீரர்கள் ஒரு வாரம் முன்பு வந்தால் எப்படி இங்கிலாந்தில் தங்களை அவர்கள் தயார்படுத்திக் கொள்ள முடியும்.

இதேபோன்று ஐபிஎல் தொடரில் விளையாடி பெயர், புகழ், பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அடுத்த தலைமுறை வீரர்கள் இருப்பதாகவும் இதனால் டெஸ்ட் போட்டியில் எப்படி விளையாடுவது என்பதையே அவர்கள் மறந்துவிட்டதாகவும் ரசிகர்கள் சாடியுள்ளனர்.ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், பேட் கம்மின்ஸ், ஸ்காட் போலந்த் போன்ற வீரர்கள் எல்லாம் ஐபிஎல் தொடரில் விளையாடாமல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் ஆஷஸ் தொடர்பாக தங்களை தயாரித்து கொண்டனர்.
ஆனால் இந்திய வீரர்களில் புஜாராவை தவிர வேறு யாரும் இந்த போட்டிக்காக தயாராகவில்லை. இதன் காரணமாகத்தான் கில், ஆப் ஸ்டம்ப் எங்கே இருக்கிறது என்று கூட தெரியாமல் ஷாட் ஆடாமலேயே போல்ட் ஆகி வெளியேறினார் என்று ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் சிலர் இந்திய வீரர்கள் வெள்ளை நிற கிரிக்கெட் பந்தில் மட்டும்தான் விளையாட தெரியும் என்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடத் தெரியாது என்றும் கடுமையாக சாடி உள்ளனர்.
மேலும் விராட் கோலி போன்றோர் ஐபிஎல் போட்டியில் சதம் அடித்தாலும், இங்கிலாந்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 14 ரன்களில் ஆட்டம் இழப்பதை எல்லாம் ஏற்றுக்கொள்ளவே முடியாத சோகம் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்திய அணி வீரர்கள் ஐபிஎல் தொடரிலிருந்து பாதியிலே வெளியேறி உலக டெஸ்ட் சாம்பியன் தொடருக்காக தங்களை தயார் படுத்திக் கொண்டிருந்தால் இன்று இவ்வளவு தடுமாறி இருக்க வேண்டியதில்லை என்றும் ரசிகர்கள் சாடி இருக்கிறார்கள்.