கவுகாத்தி: பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் 25 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சஞ்சு சாம்சன் ஆட்டமிழந்ததற்கு, எதிர்முனையில் மோசமாக ஆடிய தேவ்தத் படிக்கல் தான் காரணம் என்று ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடந்து வரும் ஐபிஎல் தொடரின் 8வது லீக் போட்டியில் ராஜஸ்தான் - பஞ்சாப் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் அணி ஷிகர் தவான் 86* மற்றும் பிரப்சிம்ரன் சிங்கின் 58 ரன்களால் 197 ரன்கள் குவித்தது. இதையடுத்து 198 ரன்கள் என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி இரண்டாவது பேட்டிங் செய்து வருகிறது. 198 ரன்கள் இலக்கு என்பதால், ராஜஸ்தான் அணி பவர் பிளே ஓவர்களில் அதிக ரன்களை குவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதனால் பட்லர் வெளுத்து வாங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ராஜஸ்தான் அணி தொடக்க வீரர் பட்லருக்கு பதிலாக ரவிச்சந்திரன் அஸ்வின் தொடக்க வீரராக களமிறங்கினார். எதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று அணி நிர்வாகம் தரப்பில் எந்த பதிலும் கொடுக்கப்படவில்லை. இதனைத் தொடர்ந்து முதல் பந்திலேயே சிக்சர் விளாசி இன்னிங்ஸை தொடங்கிய ஜெய்ஸ்வால், 11 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
பின்னர் அஸ்வினும் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழக்க, பட்லர் - சாம்சன் ஜோடி அதிரடியை தொடங்கியது. இதனிடையே எதிர்பாராவிதமாக பட்லர் 19 ரன்களில் ஆட்டமிழக்க, மொத்த பாரமும் சாம்சன் தலையில் விழுந்தது. பின்னர் வந்த படிக்கல், நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் நிதானமாக ஆடியதால், சஞ்சு சாம்சனுக்கு அதிக ஸ்ட்ரைக்கை கொடுக்காமல் பஞ்சாப் அணி விளையாடியது. கிட்டத்தட்ட 18 பந்துகளை எதிர்கொண்ட படிக்கல், 11 ரன்கள் மட்டுமே எடுத்ததோடு ஒரு பவுண்டரியை கூட அடிக்க முயற்சிக்கவில்லை.
இதனால் ராஜஸ்தான் அணியின் ரன் ரேட் குறைந்தது. இதனால் ரன் ரேட்டை உயர்த்த சஞ்சு சாம்சன் பவுண்டரியை விளாச முயற்சித்தார். ஆனால் எல்லிஸ் வீசிய 11வது ஓவரின் கடைசி பந்தில் சிக்சர் அடிக்க முயன்ற போது, சஞ்சு சாம்சன் 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். எதிர்முனையில் ரன் சேர்க்காததால், ரன் சேர்க்கும் பிரஷர் சஞ்சு சாம்சன் தலையில் விழுந்தது. இதனை பயன்படுத்தி பஞ்சாப் அணி சாம்சன் விக்கெட்டை வீழ்த்தியது. இதனால் தேவ்தத் படிக்கலை ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.