
சவாலான இலக்கு
நம்பிக்கையுடன் 2வது இன்னிங்ஸை தொடங்கிய இலங்கை அணி இந்த முறை 302 ரன்களை குவிக்க, நியூசிலாந்து அணிக்கு 284 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. சவாலான இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து அணியில் முன்னணி வீரர்கள் அனைவருமே சொதப்ப, 90 ரன்களுக்குள் 3 விக்கெட்களை இழந்தது.கேப்டன் கேன் வில்லியம்சன் மட்டுமே தூண் போல நின்று அணியை மீட்டுக்கொண்டு வந்தார்.

டி20 கிரிக்கெட் வேகம்
ஒருகட்டத்தில் அந்த அணி வெற்றி பெற 19 ஓவர்களில் 124 ரன்கள் தேவை என்ற சூழல் இருந்தது. அப்போது பொறுப்புடன் ஆடிய கேப்டன் வில்லியம்சன் சீரான வேகத்தில் சதம் அடித்தார். அவருடன் சேர்ந்து டேரில் மிட்செல் 86 பந்துகளில் 81 ரன்களை விளாசினார். ஒருபுறம் ரன்கள் வந்தாலும், மறுபுறம் சீரான இடைவெளியில் விக்கெட்களும் சரிந்தது. அதாவது 232/4 என இருந்த ஸ்கோர் திடீரென 273/7 என மாறியது. இதனால் கடைசி ஓவரில் 8 ரன்கள் தேவை என்ற சூழல் இருந்தது.

காப்பாற்றிய வில்லியம்சன்
சதமடித்திருந்த கேப்டன் கேன் வில்லியம்சன் மட்டுமே அணியை காப்பாற்ற இருக்கிறார். அந்த ஓவரின் முதல் 2 பந்துகளிலும் சிங்கிள் மட்டுமே அடிக்க, 3வது பந்தில் ட்விஸ்ட் காத்திருந்தது. ஃபுல்டாஸாக வந்த பந்தை அடித்துவிட்டு 2 ரன்கள் ஓட நினைத்தார். ஆனால் 2வது ரன் ஓடுகையில் மறுமுனையில் இருந்த மேன் ஹென்ரி ரன் அவுட்டானார். இதனால் 3 பந்துகளில் 6 ரன்கள் தேவை என மாறியது. ரசிகர்களும் இருக்கையின் நுனிக்கு சென்றுவிட்டனர்.

சூப்பர் பவுண்டரி
எப்படியோ ஸ்ட்ரைக்கை தக்கவைத்துக்கொண்ட வில்லியம்சன் 4வது பந்தை பவுண்டரிக்கு அனுப்பி வெற்றி பாதைக்கு கொண்டு சென்றார். எனவே 2 பந்துகளில் 1 ரன் தேவை என மாறியது. ஆனால் 5வது பந்தில் ஒரு ரன்னை கூட அடிக்க முடியாததால் மீண்டும் பதற்றம் தொற்றிக்கொண்டது. கடைசி ஒரே ஒரு பந்தில் ஒரே ஒரு ரன் தேவை. யாருக்கு வெற்றி என்று நிர்ணயிக்கக்கூடிய அந்த பந்தை ஷார்ட்டாக போட்டது தான் கூடுதல் சிறப்பு.

கடைசி ஓவர் த்ரில்லர்
அசிதா ஃபெர்னாண்டோ வீசிய ஷார்ட் பாலை சற்றும் எதிர்பார்க்காத வில்லியம்சன் அடிக்க தவறிவிட்டு, அதிவேகமாக சிங்கிள் ஓடினார். ஒருபுறம் ரன் அவுட் ஆக்குவதற்காக பந்து வேகமாக ஸ்டம்பிற்கு வருகிறது. மறுபுறம் வில்லியம்சன் கிறீஸில் டைவ் அடித்து விழ, இலங்கை வீரர்கள் உற்சாகமாக வெற்றி என கொண்டாட தொடங்கினர். பின்னர் 3வது நடுவரின் ரிவ்யூவில், வில்லியம்சன் கிறீஸை தொட்டது உறுதியானதால் நியூசிலாந்தின் பக்கம் வெற்றி சாய்ந்தது. இந்த தோல்வியின் மூலம் இலங்கையின் டெஸ்ட் சாம்பியன்ஷிப் கனவு தகர்ந்தது. மேலும் இந்தியா இறுதி சுற்றுக்கு முன்னேறியது.


Click it and Unblock the Notifications