
ட்ரெண்டிங் ஹேஷ்டேக்
அதாவது இந்தியாவில் இன்று காலை முதல் ட்விட்டரில் விராட் கோலியை கைது செய்ய வேண்டும் எனக்கோரும் வகையில் #Arrestkohli என்ற ஹேஷ்டேக்கை ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். எதற்காக திடீரென இது ட்ரெண்டாகிறது என ரசிகர்கள் குழப்பமடைந்த நிலையில் தமிழகத்தில் நடந்த சம்பவம் தான் இதற்கு அடித்தளம் என தெரியவந்துள்ளது.

என்ன நடந்தது
அரியலூரில் ரோகித் சர்மாவின் ரசிகர் ஒருவரை விராட் கோலியின் ரசிகர் கொலை செய்துள்ளார். கடந்த அக்டோபர் 11 ம் தேதியன்று இரவு, கோலியின் ரசிகரான தர்மராஜூம், ரோகித் ரசிகரான விக்னேஷும் ஒன்றாக அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது இருவருக்கு இடையேயும் கோலி சிறந்தவரா? ரோகித் சிறந்தவரா? என வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

கொடூர கொலை
ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த விராட் கோலியின் ரசிகர் தர்மராஜ், ரோகித் சர்மாவின் ரசிகரான விக்னேஷை கிரிக்கெட் பேட்டால் அடித்தே கொலை செய்துவிட்டு தப்பி ஓடியுள்ளார். கொலைக்கான காரணம் கிரிக்கெட் தான் என்பது இன்று தான் தெரியவந்துள்ளது. இதனையடுத்து தேடுதல் வேட்டையில் களமிறங்கிய போலீசார் சமீபத்தில் தர்மராஜை கைது செய்துள்ளனர். இதனால் தான் கோலியின் பெயர் ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது.

வல்லுநர்களின் கருத்து
சினிமாவில் அஜித் - விஜய் போன்று, கிரிக்கெட்டில் சச்சின் - டிராவிட், கோலி - தோனி என அடிக்கடி பெரும் பிரச்சினைகள் ஏற்படுவது வழக்கமான ஒன்றாக மாறி வருகிறது. ஆனால் இது தற்போது கொலை வரைக்கும் சென்றிருப்பது தான் ரசிகர்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. எனவே முன்னணி வீரர்கள் இதுகுறித்து அவ்வப்போது ரசிகர்களுக்கு அறிவுரை கூற வேண்டும் என வல்லுநர்கள் கூறியுள்ளனர்.


Click it and Unblock the Notifications