மும்பை : ஐபிஎல் தொடரில் ஆர் சி பி அணி தோல்வியை தழுவியதற்கு முக்கிய காரணமாக அந்த அணியின் பேட்டிங் நடுவரிசை இருப்பதாக கேப்டன் டுபிளசிஸ் கூறியுள்ளார். ஆர் சி பி அணியில் மூன்று வீரர்கள் மட்டும்தான் பேட்டிங்கில் ஓரளவுக்கு நன்றாக விளையாடி வருகிறார்கள்.
இதனை அந்த அணி ரசிகர்கள் கே ஜி எஃப் என்று அழைத்துக் கொண்டாடி வருகின்றனர்.கோலி, மேக்ஸ்வெல் மற்றும் டுபிளஸ்சி ஆகிய மூன்று வீரர்கள் மட்டுமே ஒவ்வொரு போட்டியிலும் ரன்களை சேர்த்து வருகிறார்கள்.

கடந்த முறை ஆர்சிபி அணி வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்தவர் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக். இறுதிக்கட்டத்தில் பேட்டிங்கிற்கு வந்து 15 பந்துகளின் 30 ரன்கள் என அதிரடியாக விளையாடி பல்வேறு போட்டிகளை வென்று கொடுத்தார். இதன் காரணமாக மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு தினேஷ் கார்த்திக்குக்கு கிடைத்தது.
ஆனால் இம்முறை தினேஷ் கார்த்திக் படு மோசமாக விளையாடி வருகிறார். எப்போதும் விக்கெட் கீப்பிங்கில் கில்லி மாதிரி செயல்படும் தினேஷ் கார்த்திக், இந்த சீசனில் விக்கெட் கீப்பிங்கில் தடுமாறியது தான் மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்தது. இதனால் கடந்த சில போட்டிகளில் தினேஷ் கார்த்திக்கை நீக்கிவிட்டு அனுஜ் ராவத்தை இம்பேக்ட் வீரராக ஆர் சி பி கொண்டுவரும் நிலை ஏற்பட்டது.
விக்கெட் கீப்பரை மாற்றுவதற்காக இம்பேக்ட் விதியை rcb மட்டும் தான் பயன்படுத்தியது. இதனால் அவர்களுக்கு கூடுதலாக பந்து வீசும் வீரர் இல்லாமல் போனது மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்தது. நடப்பு தொடரில் மட்டும் தினேஷ் கார்த்திக் மூன்று முறை டக் அவுட் ஆகி இருக்கிறார். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை டக் அவுட் ஆன வீரர் என்ற சோகமான பெருமையை தினேஷ் கார்த்திக் படைத்திருக்கிறார்.
இந்த பட்டியலில் தினேஷ் கார்த்திக் 17முறையும் , ரோகித் சர்மா பதினாறு முறையும், மந்திப் சிங் மற்றும் சுனில் நரைன் 15 முறையும் டக் அவுட் ஆகி இருக்கிறார்கள். இந்த சீசனில் தினேஷ் கார்த்திக் 13 முறை பேட்டிங்கில் விளையாடி மொத்தமாகவே 140 ரன்கள் தான் அடித்திருக்கிறார். இதில் சராசரி வெறும் 11 ஆகும். தினேஷ் கார்த்திக் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வருகிறார். இதில் அவர் அடித்த குறைந்தபட்ச ஸ்கோர் என்றால் இதுதான்.
அதற்கு முன்பு 2015 ஆம் ஆண்டு 141 ரன்களும், 2008 ஆம் ஆண்டு 145 ரன்கள் அடித்தது குறைவாகும். தினேஷ் கார்த்திக் டி20 உலக கோப்பைக்கு பிறகு இந்திய அணியில் சேர்க்கப்படாததால் மீண்டும் கிரிக்கெட் வர்ணனையில் கவனம் செலுத்தி வந்தார். இதனால் பேட்டிங்கில் அவருடைய பார்ம் பாதிக்கப்பட்டது. இதனால் மீண்டும் அவரை கிரிக்கெட் கமெண்ட்ரிக்கு சென்று விடு சிவாஜி என ரசிகர்கள் கிண்டல் செய்து வருகிறார்கள்.