டோமினிக்கா: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பிற்கு 80 ரன்கள் குவித்துள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டோமினிக்காவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் பிராத்வெயிட் பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்த மைதானம் தொய்வாக இருந்ததோடு, முதலில் பவுலிங் செய்யும் அணிக்கு ஓரளவிற்கு சாதகமாக இருக்கும் என்பதால், இந்த முடிவை எடுத்தார். இதையடுத்து பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 150 ரன்களுக்கு அஸ்வின் மற்றும் ஜடேஜா சுழலில் சரணடைந்தது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணியில் சேர்க்கப்படாமல் இருந்த ரவிச்சந்திரன் அஸ்வின் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி தரமான கம்பேக்கை நிகழ்த்தி காட்டினார். இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் 700 விக்கெட்டுகளை விரைந்து வீழ்த்திய வீரர் என்ற சாதனையையும் அஸ்வின் படைத்தார். இதன்பின்னர் இந்திய அணி தரப்பில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் - ரோகித் சர்மா கூட்டணி களமிறங்கியது.
நீண்ட ஆண்டுகளுக்கு பின் இடது - வலது காம்பினேஷனில் இந்திய அணி களமிறங்கியது. அதுமட்டுமல்லாமல் இளம் வீரர் ஜெய்ஸ்வாலுக்கு முதல் போட்டி என்பதால் அவரின் பேட்டிங் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டது. முதல் சில ஓவர்களில் ஜெய்ஸ்வால் அழுத்தத்துடன் விளையாடினார். ஆனால் மறுமுனையில் நின்றிருந்த ரோகித் சர்மா, எதைப்பற்றியும் கவலைப்படாமல் பவுண்டரியுடன் ரன் கணக்கை தொடங்கினார்.
ரோகித் சர்மா பவுண்டரிகளாக விளாச, ஜெய்ஸ்வால் முதல் ரன்னை சேர்க்க 15 பந்துகளை எடுத்துக் கொண்டார். சர்வதேச கிரிக்கெட்டில் முதல் ரன்னை பவுண்டரி மூலம் எடுத்த ஜெய்ஸ்வால், அடுத்தடுத்து சிறப்பாக ரன்களை சேர்க்க தொடங்கினார். சிறப்பாக ஆடிய இந்த தொடக்க கூட்டணி 50 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை கடந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் ஸ்பின்னர்களை வைத்து அட்டாக் செய்தும் இந்திய அணியின் முதல் விக்கெட்டை வீழ்த்த முடியவில்லை.
இதனிடையே திடீரென ஆட்டத்தில் மழை குறுக்கிட்டது. ஆனால் சில நிமிடங்களில் மழை நின்றதால், ஆட்டம் 5 நிமிடங்களில் மீண்டும் தொடங்கியது. இதையடுத்து அதிகம் ரிஸ்க் எடுக்காத இந்திய அணி வீரர்கள் சில பவுண்டரிகளை மட்டும் விளாசினார். இறுதியாக முதல் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி இந்திய அணி 80 ரன்கள் குவித்துள்ளது. ஜெய்ஸ்வால் 40 ரன்களுடனும், ரோகித் சர்மா 30 ரன்களுடன் களத்தில் உள்ளனர். இன்னும் 70 ரன்கள் மட்டுமே பின் தங்கியுள்ள நிலையில், 2ஆவது நாளில் இந்திய வீரர்கள் வெளுத்து வாங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.