”யாரு படம் ஓடினாலும் ஹீரோ அங்க தோனிடா” தல தோனி செய்த சேட்டைகள்.. ரசிகர்களின் வெறித்தன மீம்ஸ்!
சென்னை: டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்து பிளே ஆஃப் சுற்றுக்குள் ஒரு கால் எடுத்து வைத்துள்ளது. இந்தப் போட்டியில் நடைபெற்ற சுவாரஸ்யங்களை வைத்து சமூக வலைதளங்களில் ரசிகர்கள் உருவாக்கிய மீம்ஸை பார்க்கலாம்.
சென்னை அணியின் கேப்டன் எம்எஸ் தோனி களத்தில் சில நேரங்களில் சுட்டித்தனமாக இருப்பார். அப்படி நேற்று டாஸ் போட களமிறங்கும் போது, வேகப்பந்துவீச்சாளர் தீபக் சஹரின் தலையில் அடிப்பது போல் கைகளை கொண்டு சென்று ஏமாற்றினார். இதனால் தீபக் சஹர் அரண்டு போனார். இதனை எங்கள் அண்ணா படத்தில் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கும் வடிவேலுவை திடீரென பின்னால் இருந்து விஜயகாந்த் அடிக்கும் காட்சியோடு ஒப்பிட்டு உருவாக்கப்பட்டுள்ள மீம் அட்ரா சக்க ரகம்.

நேற்றையப் போட்டியில் டாஸ் போட்ட பின் தோனி அணியில் ஒரு மாற்றம் இருப்பதாகவும், சிவம் துபே நீக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். ஆனால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட அணியில் பதிரானா இம்பேக்ட் பிளேயராகவும், முதலில் பேட்டிங் செய்ததால் துபே பேட்ஸ்மேனாகவும் தேர்வு செய்யப்பட்டிருந்தார். இதுதான் மாற்றமா என்பது போல் செந்திலை பார்த்து கவுண்டமணியின் புகைப்படத்தை வைத்து உருவாக்கப்பட்ட மீம் வேற லெவல்.

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் 9 பந்துகளை எதிர்கொண்ட தோனி, 2 சிக்சர் ஒரு பவுண்டரி உட்பட 20 ரன்களை விளாசினார். இதனால் சென்னை அணி ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அந்த கொண்டாட்டத்தை விவரிக்கும் வகையில், pursuit of Happiness படத்தில் நடிகர் வில் ஸ்மித் சொல்லும், "This Part of My Life.. This Little Part, is called happiness" என்று சென்னை அணி ரசிகர்கள் சொல்வது போல் உருவாக்கப்பட்டுள்ள மீம் செண்ட்மெண்டல் டச்.

அதேபோல் தோனி பேட்டிங் செய்யும் போது அவரது மகள் ஸிவா, மைதானத்தில் இருந்து உற்சாகப்படுத்தினார். ஒவ்வொரு சிக்சர், பவுண்டரி செல்லும் போதும் அவரை கேமராக்கள் ஃபோக்கஸ் செய்தது. இதனை ஜெர்சி படத்தில் வரும் நானியை அவரது மகள் உற்சாகப்படுத்தும் புகைப்படத்தோடு ஒப்பிட்டு உருவாக்கப்பட்டுள்ள மீம் கூல்பம்ப் ஃபீல்.

டெல்லி அணியின் பேட்டிங்கின் போது அபாரமான ஃபார்மில் உள்ள மிட்செல் மார்ஷ், மணீஷ் பாண்டேவின் தவறால் ரன் அவுட்டாகி வெளியேறினார். இதையடுத்து அவர் பேட்டிங் செய்து வெற்றிக்கு அழைத்து செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 29 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனால் மணீஷ் பாண்டேவை வெளுக்க ஓய்வறையில் மிட்செல் மார்ஷ் காத்திருப்பது போல் உருவாக்கப்பட்ட மீம் வெறித்தனம்.



Click it and Unblock the Notifications