"மிரட்டல் விடுத்த விமான ஊழியர்கள்".. குடும்பத்துடன் தவித்ததாக கிரிக்கெட் ஜாம்பவான் சங்கக்காரா புகார்
டப்ளின்: இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் குமார் சங்கக்காரா, அயர்லாந்து விமான நிலையத்தில் ரியான் ஏர் என்ற விமான நிறுவன ஊழியர்கள் தன்னையும், தன் குடும்பத்தையும் மோசமாக நடத்தியதாக கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். தனது குடும்பத்தினரை ஊழியர்கள் மிரட்டியதாக அவர் தெரிவித்துள்ளார்.
அயர்லாந்து நாட்டின் டப்ளின் விமான நிலையத்தில் பிரபல ரியான்ஏர் நிறுவன விமானத்தில் பயணிக்க சங்கக்காரா தனது குடும்பத்துடன் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த ஊழியர்கள் தங்களை பாகுபாட்டுடன் நடத்தியதோடு, மிரட்டும் தொனியில் பேசியதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், "டப்ளின் விமான நிலையத்தில் ரியான்ஏர் ஊழியர்களின் இத்தகைய பாகுபாடான போக்கை யாராவது சந்தித்திருக்கிறீர்களா? எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் இப்போது அப்படி ஒரு அதிர்ச்சிகரமான அனுபவம் ஏற்பட்டது. அவர்கள் பேசிய விதம், கையாண்ட தவறான நடைமுறைகள் மற்றும் மிரட்டும் அணுகுமுறை எந்த ஒரு பயணியாலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. டப்ளின் நகரில் எனக்கு ஏற்பட்ட முதல் கசப்பான அனுபவம் இது" என ஆதங்கத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை அணிக்காக 134 டெஸ்ட், 404 ஒருநாள் மற்றும் 56 டி20 போட்டிகளில் ஆடியுள்ள மூத்த வீரரான சங்கக்காரா, மைதானத்தில் கோபப்படாத மனிதர் எனப் பெயரெடுத்தவர். அப்படிப்பட்டவரே பொதுவெளியில் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சங்கக்காராவின் இந்தப் பதிவுக்கு இணையத்தில் ஆதரவு பெருகி வருகிறது. மற்றொரு பயனர் பதிவிட்ட கருத்துக்குப் பதிலளித்த சங்கக்காரா, இது போன்ற பாகுபாட்டை நேரடியாக எதிர்கொள்ளும்போது மிகுந்த மன உளைச்சலைத் தருகிறது எனக் கூறியுள்ளார். ஐரோப்பாவின் மிகப்பெரிய பட்ஜெட் விமான நிறுவனமாக விளங்கும் ரியான்ஏர், சங்கக்காராவின் இந்த குற்றச்சாட்டு குறித்து இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை.
இதற்கு முன்பும் சமூக ஊடகங்களில் ரியான்ஏர் நிறுவனம் குறித்து பல்வேறு புகார்கள் பதிவாகி உள்ளன. கிரிக்கெட் ஜாம்பவான் ஒருவரே புகார் அளித்துள்ள நிலையில் அந்த நிறுவனம் மீதான விமர்சனம் மேலும் அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications

