“நாட்டுக்காக ஆடணும் என்று..”.. 28 வயதிலேயே ஓய்வை அறிவித்த அயர்லாந்து சுழற்பந்து வீச்சாளர் பென் ஒயிட்
டூப்ளின்: அயர்லாந்து அணியின் இளம் லெக் ஸ்பின்னரான பென் ஒயிட், தனது 28 வயதிலேயே சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளார். இதன் மூலம் அனைத்து வகையான சர்வதேச போட்டிகளுக்கும் அவர் முழுமையாக விடை கொடுத்துள்ளார். வலது கை சுழற்பந்து வீச்சாளரான இவர், கடந்த 2021-ல் அயர்லாந்து சீனியர் அணியில் அறிமுகமானார். சர்வதேச அரங்கில் அனைத்து வடிவங்களிலும் சேர்த்து இதுவரை 41 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இறுதியாக கடந்த 2025 டிசம்பர் மாதம் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் விளையாடினார்.
குறுகிய வடிவ கிரிக்கெட்டான டி20-ல் பென் ஒயிட் அயர்லாந்து அணியின் பலம் வாய்ந்த பந்துவீச்சாளராகத் திகழ்ந்தார். 2021, 2024 மற்றும் 2026 ஆகிய 3 ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர்களில் அயர்லாந்து அணிக்காக களமிறங்கி விளையாடினார். பந்தின் வேகத்திலும் சுழற்சியிலும் மாற்றங்களைச் செய்து எதிரணி வீரர்களைத் திணறடித்தார். டி20 கிரிக்கெட்டில் சராசரியாக ஒவ்வொரு 20 பந்துகளுக்கும் ஒரு விக்கெட் வீழ்த்தி அசத்தினார். 2024-ல் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 20 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதே சர்வதேச அரங்கில் இவரது சிறந்த பந்துவீச்சாகும்.

உள்நாட்டு கிரிக்கெட்டிலும் பென் ஒயிட் தனி முத்திரையைப் பதித்தார். 2021 உள்ளூர் டி20 தொடரில் 17 விக்கெட்டுகளைக் குவித்து அதிக விக்கெட் எடுத்த வீரராக சாதனை படைத்தார். ஃபீனிக்ஸ் கிளப் அணிக்காக ஆடி, 2024-ல் 34 ரன்களுக்கு 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அணி கோப்பையை வெல்ல உதவினார்.
ஓய்வு குறித்து பேசிய பென் ஒயிட், "நாட்டிற்காக விளையாட வேண்டும் என்ற எனது சிறுவயது கனவு நனவாகியுள்ளது. 3 உலகக் கோப்பைகள் மற்றும் டெஸ்ட் போட்டியில் ஆடியதை நினைத்து எப்போதும் பெருமைப்படுவேன். இந்த வாய்ப்பை அளித்த கிரிக்கெட் வாரியத்திற்கு நன்றி" எனத் தெரிவித்தார். அயர்லாந்து அணியின் தலைமைப் பயிற்சியாளர் கேரி வில்சன், பென் ஒயிட்டின் அர்ப்பணிப்பையும் அபார திறமையையும் பாராட்டி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications

