WPL 2027: லேடி வைபவ் சூர்யவன்ஷி.. 15 வயதில் உமா காஷ்வி மகளிர் பிரீமியர் லீக் ஏலத்தில் சாதனை
கொச்சி: மகளிர் பிரீமியர் லீக் ஏலத்தில் 15 வயதான உமா காஷ்வி என்ற கர்நாடகாவைச் சேர்ந்த ஆல்-ரவுண்டர் புதிய வரலாறு படைத்துள்ளார். டெல்லி கேபிடல்ஸ் அணி இவரை ரூ. 10 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்துள்ளது. இதன் மூலம் மகளிர் பிரீமியர் லீக் தொடரின் வரலாற்றிலேயே ஒப்பந்தம் செய்யப்பட்ட மிக குறைந்த வயது வீராங்கனை என்ற சாதனையை இவர் படைத்துள்ளார்.
2011 ஏப்ரல் 9 அன்று பிறந்த காஷ்வி கண்டிக்குப்பா, இந்திய அணி 2011 உலகக் கோப்பையை வென்ற ஏழு நாட்களுக்குப் பிறகு பிறந்தவர். இளம் திறமையாளர்களைக் கண்டறிந்து வாய்ப்பளிப்பதில் பெயர் பெற்ற டெல்லி கேபிடல்ஸ் அணி இவரை ஏலத்தில் எடுத்துள்ளது. இதற்கு முன்பு ஹரியானாவைச் சேர்ந்த தீயா யாதவ் தனது 16வது வயதில் டெல்லி அணியால் தேர்வு செய்யப்பட்டதே சாதனையாக இருந்தது. தற்போது அந்த சாதனையை காஷ்வி முறியடித்துள்ளார்.

வலதுகை பேட்ஸ்மேனாகவும், ஆஃப்-ஸ்பின் பந்துவீச்சாளராகவும் செயல்படும் காஷ்வி, பிசிசிஐ நடத்திய 15 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் ஒருநாள் தொடரில் 172 சராசரியுடன் 516 ரன்கள் குவித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இதில் 3 சதங்களும் ஒரு அரைசதமும் அடங்கும்.
கர்நாடக மாநில அளவில் இதுவரை 530 போட்டிகளில் விளையாடியுள்ள காஷ்வி, 13,000-க்கும் அதிகமான ரன்களைக் குவித்து 24 சதங்களையும் 68 அரைசதங்களையும் விளாசியுள்ளார். கர்நாடக 15 வயதுக்குட்பட்டோர் அணியின் கேப்டனாகவும், மகாராணி கோப்பை தொடரில் பெங்களூரு பிளாஸ்டர்ஸ் அணியின் கேப்டனாகவும் அவர் செயல்பட்டுள்ளார். மேலும், 19 வயதுக்குட்பட்டோருக்கான டி20 கோப்பையை வென்ற கர்நாடக அணியிலும் அவர் முக்கிய பங்கு வகித்துள்ளார்.
2026 ஜூன்-ஜூலை மாதங்களில் இலங்கை அணிக்கு எதிரான தொடரில் களமிறங்கிய அவர், பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் சிறப்பான பங்களிப்பை அளித்து, ஐந்து போட்டிகளில் நான்கில் விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
தனது ஏழரை வயதிலேயே வீட்டிற்கு அருகில் இருந்த கிரிக்கெட் அகாடமியில் பயிற்சியைத் தொடங்கிய காஷ்வி, பின்னர் நைஸ் அகாடமியில் இணைந்து தனது ஆட்டத்திறனை மேலும் மேம்படுத்திக் கொண்டார். இதற்கு முன்பாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் பயிற்சி பெறும் வாய்ப்பைப் பெற்ற அவர், ஆக்ரோஷமாக விளையாடுவதன் முக்கியத்துவத்தையும் தன்னம்பிக்கையையும் அந்த அனுபவம் தமக்குக் கற்றுக்கொடுத்ததாகத் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications


