மும்பை: ராகுல் டிராவிட் இந்திய அணியின் பயிற்சியாளராக விலகிய நிலையில் அந்த பொறுப்புக்கு கம்பீர் பல எதிர்பார்ப்புக்கு நடுவே வந்து அமர்ந்தார். கம்பீரின் செயல்பாடு பயிற்சியாளராக பல விமர்சனத்தையும், சில வரவேற்பையும் பெற்றிருக்கிறது.
கம்பீர் தலைமையில் இந்திய அணி சாம்பியன்ஸ் கோப்பை மற்றும் ஆசிய கோப்பையை வென்ற நிலையில் இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை இரண்டுக்கு இரண்டு என்ற கணக்கில் வென்றது. ஆனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியாமல் சென்றது.

சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஒயிட்வாஷ் ஆனது.இது போன்ற பல்வேறு சரிவுகளும் நிகழ்ந்தது. எனினும் டி20 கிரிக்கெட்டில் கம்பீர் தலைமையில் இந்திய அணி 22 போட்டிகளில் 20 ஆட்டங்களில் வென்றது. இந்த நிலையில் ஒட்டுமொத்தமாக கம்பீரின் செயல்பாடு என்ன? ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் இருந்தால் கம்பீரின் செயல்பாடு எப்படி இருக்கிறது?
அவர்கள் இல்லாமல் கம்பீரின் செயல்பாடு எப்படி இருக்கிறது என்பதை தற்போது பார்க்கலாம். ஒட்டுமொத்தமாக தற்போது கம்பீர் பயிற்சியாளராக செயல்பட்டு இந்திய அணி 53 போட்டிகளில் விளையாடி இருக்கிறது. இதில் இந்திய அணி 36 போட்டிகளில் வெற்றி, 14 போட்டிகளில் தோல்வி, ஒரு போட்டியில் டை மற்றும் 2 போட்டிகளில் சமன் ஆகியவற்றை பெற்றிருக்கிறது.
இதன் மூலம் கம்பீரின் வெற்றி சதவீதம் 67.9 ஆக இருக்கின்றது. இந்த நிலையில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருந்தால் மொத்தமாக 24 போட்டிகளில் இந்தியா 12 போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. இது 50 சதவீதம் வெற்றியாகும். எனினும் இருவரும் இல்லாமல் பயிற்சியாளர் கம்பீர் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.
இரு ஜாம்பவான்களும் இல்லாமல் கம்பீர் பயிற்சியின் கீழ் இந்திய அணி 29 போட்டிகளில் விளையாடி 24 போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. இதில் இந்திய அணியின் வெற்றி சதவீதம் 83 என்ற அளவில் இருக்கிறது. டெஸ்ட் போட்டியை பொருத்தவரை இந்த இரண்டு ஜாம்பவான்களும் இல்லாமல் 17 போட்டிகளில் 7 போட்டிகளில் வெற்றி, எட்டு போட்டிகளில் தோல்வி, 2 போட்டிகளில் டிரா ஆகியவை பெற்றிருக்கிறது.
விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் விளையாடி முதல் 10 போட்டிகளில் இந்தியா வெறும் மூன்று போட்டிகளில் மட்டுமே வென்றிருக்கிறது. 6 தோல்வியை தழுவி இருக்கிறது. ஒரு நாள் போட்டியை பொறுத்தவரை இந்திய அணி கம்பீர் மற்றும் ரோகித் சர்மாவுடன் 14 போட்டிகளில் விளையாடி ஒன்பது போட்டிகளில் வெற்றியை பெற்றிருக்கிறது.நான்கு போட்டிகளில் தோல்வி ஒரு போட்டி டையில் முடிவடைந்து இருக்கிறது. விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இல்லாமல் அணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்பதால் தான் இளம் வீரர்களை அதிக அளவு கம்பீர் கொண்டு வர முயற்சி செய்கிறார்.