"இந்தியா 2027 உலகக்கோப்பை ஜெயிக்கணும்னா..".. கம்பீர் vs. ரோஹித், கோலி.. மனோஜ் திவாரி வார்னிங்
மும்பை: 2027 ஒருநாள் உலகக் கோப்பைத் தொடருக்கு முன்பாக, இந்திய அணியின் டிரஸ்ஸிங் ரூமில் நிலவும் மனக்கசப்புகள் மற்றும் கருத்து வேறுபாடுகளை உடனடியாகச் சரிசெய்ய வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் மனோஜ் திவாரி சுட்டிக் காட்டி இருக்கிறார்.
சமீபத்தில் நடைபெற்ற அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து சுற்றுப்பயணங்களில் இந்திய அணி தொடர் தோல்விகளைச் சந்தித்தது. அதற்கு அணிக்குள் நிலவிய கருத்து வேறுபாடு, வீரர்களிடையே தங்களின் இடம் குறித்த சந்தேகம் போன்ற அசாதாரண சூழலே காரணம் என்று விமர்சனம் எழுந்தது.

இது குறித்துப் பேசிய மனோஜ் திவாரி, "2027 ஒருநாள் போட்டி உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்காவில் நாம் சிறப்பாகச் செயல்பட வேண்டுமானால், டிரஸ்ஸிங் ரூமில் உள்ள பிரச்சனைகளை உடனடியாகச் சரிசெய்ய வேண்டும். கௌதம் கம்பீர் தலைமை பயிற்சியாளராகப் பொறுப்பேற்ற பிறகு, மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோருடன் அவருக்குச் சரியான சுமுகமான உறவு இல்லை என்று பல தகவல்கள் வருகின்றன" என்றார்.
மேலும் பேசிய அவர், "அணிக்குள் வீரர்கள் சரியாகப் பேசிக்கொள்வதில்லை என்று வதந்திகள் பரவுகின்றன. மைதானத்தில் வெளிப்படும் மோசமான முடிவுகள், டிரஸ்ஸிங் ரூமில் என்ன நடக்கிறது என்பதன் பிரதிபலிப்பு தான். 2027 உலகக் கோப்பைக்கு வலுவான பிளேயிங் லெவனைத் தேர்வு செய்ய வேண்டுமானால், இப்போதே நிலையான கூட்டணியை உருவாக்க வேண்டும். அணிக்குள் அமைதியும், நல்ல சூழலும் நிலவுவது மிகவும் அவசியம். ஆனால் தற்போது அது இந்திய அணியில் இல்லை" என்று நேரடியாக விமர்சித்தார்.
தற்போது ஜிம்பாப்வே டி20 தொடரில் இடைக்கால பயிற்சியாளராக வி.வி.எஸ். லக்ஷ்மன் செயல்பட்டு வரும் நிலையில், இந்திய அணி முதல் போட்டியில் வெற்றி பெற்று நேர்மறையான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது. முதன்மை பயிற்சியாளர் கம்பீர் மீண்டும் அணிக்கு திரும்பும்போது இந்த பிரச்சனைகள் களையப்படாவிட்டால், அது ஒருநாள் போட்டி உலகக் கோப்பை கனவைப் பெரிய அளவில் பாதிக்கும் என்று மனோஜ் திவாரி சுட்டிக் காட்டி இருக்கிறார்.


Click it and Unblock the Notifications
