செஞ்சுரி அடித்த உடன் கம்பீருடன் விவாதம் செய்த ரோஹித் சர்மா.. போட்டி முடியும் முன்பே நடந்த நிகழ்வு
லண்டன்: லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் சதம் விளாசி பதிலடி கொடுத்த இந்திய அணியின் மூத்த வீரர் ரோஹித் சர்மா, அதன் பின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீருடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
இந்தப் போட்டியுடன் ஓய்வு பெறுவார் என்ற பல்வேறு யூகங்களுக்கு மத்தியில் களம் இறங்கிய ரோஹித் சர்மா, தனது 34வது ஒருநாள் சதத்தை பூர்த்தி செய்து, லார்ட்ஸ் மைதானத்தில் சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற வரலாற்று சாதனையை படைத்தார். 39 வயது 80 நாட்களில் இந்த மைல்கல்லை எட்டியதன் மூலம், இந்திய அணிக்காக சர்வதேச சதம் அடித்த மிக வயதான இந்திய வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையையும் அவர் முறியடித்தார்.

இந்தப் போட்டியில் 138 ரன்கள் குவித்து ஆட்டமிழந்த ரோஹித் சர்மா, பெவிலியன் சென்று இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீருடன் தீவிரமாக பேசிய காட்சிகள் வெளியானது. இந்தப் போட்டி முடியும் முன்பே இருவருக்கு இடையே சில நிமிடங்கள் தீவிர விவாதம் நடைபெற்றது. மைதானத்தில் அமர்ந்து இருவரும் அடுத்த கட்ட வியூகங்கள் குறித்து ஆலோசித்ததாக கூறப்படுகிறது.
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி ரசிகர்களிடையே பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. ரோஹித்தின் ஓய்வு குறித்து எதுவும் பேசப்பட்டதா அல்லது போட்டி வியூகம் குறித்தா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ரோஹித் சர்மாவுக்கு தற்போது 39 வயது ஆகும் நிலையில் அவரை நீக்கி விட்டு இளம் தொடக்க வீரரான ஜெய்ஸ்வாலை ஒருநாள் அணியில் சேர்க்க வேண்டும், அவரை 2027 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடருக்கு தயார் செய்ய வேண்டும் என தேர்வுக் குழு முடிவு செய்து இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில் தான் ரோஹித் சர்மா சதம் அடித்து தனது ஃபார்மை நிரூபித்து இருக்கிறார். அதனால் ரோஹித் சர்மாவை நீக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தான் கம்பீர், ரோஹித் சர்மாவுடன் பேசி இருப்பார் என்பதே ரசிகர்களின் கருத்தாக உள்ளது.


Click it and Unblock the Notifications

