கம்பீரிடம் டீல் பேசும் 4 ஐபிஎல் அணிகள்.. பயிற்சியாளர் பதவி குறித்து பேச்சுவார்த்தை.. என்ன நடக்கிறது?
மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீரின் பதவிக்காலம் முடிவடைய இன்னும் ஓராண்டு காலம் உள்ள நிலையில், ஐபிஎல் 2028 சீசனில் அவரை தலைமைப் பயிற்சியாளராக ஒப்பந்தம் செய்ய 4 முன்னணி ஐபிஎல் அணிகள் இப்போதே தீவிர முயற்சிகளில் இறங்கியுள்ளன.
கௌதம் கம்பீருக்கு பிசிசிஐயுடன் உள்ள ஒப்பந்தம் 2027 ஒருநாள் உலகக் கோப்பை வரை நீடிக்கிறது. ஆனாலும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் உள்பட மொத்தம் 4 அணிகள் கம்பீரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் ஐபிஎல் தொடரின் மிகவும் வெற்றிகரமான ஒரு அணியும், இதுவரை ஒருமுறை கூட கோப்பை வெல்லாத மற்றொரு அணியும் அடங்கும் எனத் தெரிகிறது.

ஐபிஎல் வரலாற்றில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக 2 முறை சாம்பியன் பட்டம் வென்ற கம்பீர், கடந்த 2024 சீசனில் அந்த அணியின் ஆலோசகராகத் திரும்பி 3-வது கோப்பையை வென்று தந்தார். முன்னதாக லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் ஆலோசகராக இருந்தபோதும் அந்த அணியை தொடர்ச்சியாக 2 முறை பிளே-ஆப் சுற்றுக்கு அழைத்துச் சென்றார். இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்ற பிறகு 2025 சாம்பியன்ஸ் டிராபி மற்றும் 2026 டி20 உலகக் கோப்பை ஆகியவற்றை வென்று தந்து தனது முத்திரையைப் பதித்துள்ளார்.
தற்போது இந்திய அணியுடன் நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் உள்ள கம்பீர் மீண்டும் ஐபிஎல் தொடருக்குத் திரும்புவாரா என்பது இந்திய அணியுடனான அவரது ஒப்பந்த நீட்டிப்பைப் பொறுத்தே அமையும். 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் இடம்பெற உள்ளதால், அதுவரை கம்பீரின் பதவிக்காலம் நீட்டிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. எனினும் ஐபிஎல் அணிகள் இப்போதே அவருக்காக தூதுவிட்டு வருவது கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications

