வைபவ் சூர்யவன்ஷி போலவே இந்த சீனியர் வீரரின் பேட்டிங்கையும் காலி செய்த கம்பீர்.. ஸ்ரீகாந்த் ஆவேசம்
சென்னை: இங்கிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் கே.எல். ராகுலை பின்வரிசையில் களம் இறக்கிய இந்திய அணி நிர்வாகத்தின் முடிவை முன்னாள் கேப்டனும், தேர்வுக்குழு முன்னாள் தலைவருமான ஸ்ரீகாந்த் கடுமையாக விமர்சித்துள்ளார். சஞ்சு சாம்சன், வைபவ் சூர்யவன்ஷி ஆகியோரைத் தொடர்ந்து தற்போது கே.எல். ராகுலின் ஆட்டத்தையும் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தலைமையிலான அணி நிர்வாகம் பாழாக்கி வருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், 388 ரன்கள் என்ற இமாலய இலக்கை துரத்திய இந்திய அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து, தொடரையும் 2-1 என்ற கணக்கில் இழந்தது. இந்தப் போட்டியில் கே.எல். ராகுல் 6வது வரிசையில் களம் இறக்கப்பட்டார். அப்போது இந்தியா 304 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து இருந்ததுடன், ஓவருக்கு 15 ரன்கள் தேவைப்பட்டது. ராகுல் 8 பந்துகளில் 12 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.

இது குறித்து தனது யூடியூப் பக்கத்தில் பேசிய ஸ்ரீகாந்த், "இவ்வளவு பெரிய இலக்கை துரத்தும்போது கே.எல். ராகுலை யாராவது 6வது வரிசையில் களம் இறக்குவார்களா? கடினமான போட்டிகளில் நமக்கு வெற்றிகளைத் தேடித்தந்த ஒரு வீரருக்கு இழைக்கப்பட்ட பெரும் அநீதி இது. சஞ்சு சாம்சன், வைபவ் சூர்யவன்ஷி ஆகியோரின் ஆட்டத்தை கெடுத்தது போல, தற்போது கே.எல். ராகுலின் ஆட்டத்தையும் கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அவரது உடல் மொழியிலேயே பதற்றம் தெரிந்தது" என்று விளாசியுள்ளார்.
மேலும் பேசிய ஸ்ரீகாந்த், "ராகுல் 4வது வரிசையில் களம் இறங்கி இருக்க வேண்டும். 2023 உலகக் கோப்பையில் விராட் கோலியுடன் இணைந்து அவர் பலமுறை சிறப்பான கூட்டணிகளை அமைத்துள்ளார். அவரால் ஆட்டத்தை எளிதாக அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல முடியும். அதை விடுத்து போட்டி கிட்டத்தட்ட முடிந்த பிறகு அவரை பேட்டிங் செய்ய அனுப்பியது என்ன மாதிரியான முடிவு? அக்சர் படேலுடன் இணைந்து ஓவருக்கு 15 ரன்கள் அடிக்க வேண்டிய கட்டாயத்தில் அவர் எப்படி வெற்றி தேடித்தர முடியும்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்திய வீரர்களை தொடர்ந்து பேட்டிங் வரிசையில் மாற்றுவதால் அவர்கள் மத்தியில் தங்களது இடம் குறித்த பாதுகாப்பற்ற உணர்வும், பயமும் அதிகரித்து வருவதாக ரவிச்சந்திரன் அஸ்வினும் கவலை தெரிவித்துள்ளார். அயர்லாந்து, இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் அனைத்து தொடர்களையும் இந்திய அணி இழந்துள்ள நிலையில் பயிற்சியாளர் கம்பீருக்கு கடும் அழுத்தம் ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
