"இரண்டு உலகக் கோப்பை பதக்கங்கள் என்னிடம் உள்ளன; எத்தனை பேரிடம் அது இருக்கிறது?" - கௌதம் கம்பீர்
மும்பை: இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில், இந்திய அணியின் கேப்டனாக இல்லாதது பற்றியும், 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடாதது பற்றியும், எந்த ஒரு கிரிக்கெட் வடிவத்திலும் 10,000 ரன்களை எட்டாதது பற்றியும் வருத்தம் உண்டா என்று அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது.
அதற்குப் பதிலளித்த அவர், "எத்தனை இந்தியர்களிடம் இரண்டு உலகக் கோப்பை பதக்கங்கள் உள்ளன? என்னிடம் அது உள்ளது!" எனக் கூறியிருக்கிறார். 2007 டி20 உலகக் கோப்பை மற்றும் 2011 ஒருநாள் போட்டி உலகக் கோப்பை ஆகிய இரண்டு உலகக் கோப்பை வெற்றிகளிலும் கௌதம் கம்பீர் முக்கிய பங்காற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

2007 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அவர் 53 பந்துகளில் 75 ரன்கள் எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். அதேபோல, 2011 ஒருநாள் போட்டி உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அவர் 97 ரன்கள் எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.
இதுபற்றி மேலும் பேசிய கௌதம் கம்பீர், "நான் எது குறித்தும் வருத்தப்படவில்லை. எனது வீட்டில் இரண்டு உலகக் கோப்பை பதக்கங்கள் உள்ளன. இந்தியாவில் இருக்கும் மக்கள் எத்தனை பேரிடம் இது உள்ளது என்று சொல்லுங்கள். மிகச் சிலரே இரண்டு உலகக் கோப்பை பதக்கங்களை அவர்கள் வீட்டில் வைத்திருக்கிறார்கள். எனது கிரிக்கெட் வாழ்வை எதிர்மறையான கண்ணோட்டத்தில் பார்த்தால், நான் இன்னும் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கலாம், கேப்டனாக நிறைய போட்டிகளில் விளையாடி இருக்கலாம் என்று சொல்லலாம். ஆசைக்கும் விருப்பத்திற்கும் எந்த எல்லையும் இல்லை."
மெகா ட்விஸ்ட்.. இந்திய டெஸ்ட் அணியில் ரோஹித், கோலி இடத்தை பிடிக்கப் போகும் 2 வீரர்கள் இவர்கள் தான்!
"நான் விளையாடிய முதல் உலகக் கோப்பை 2007 டி20 உலகக் கோப்பை. அதற்கு முன்னால் அண்டர் 14, அண்டர் 19, 50 ஓவர் உலகக் கோப்பைகளில் நான் விளையாடியது இல்லை. ஆனால் முதல் உலகக் கோப்பையிலேயே நாங்கள் வெற்றி பெற்றோம். மேலும், நான் விளையாடிய முதல் 50 ஓவர் உலகக் கோப்பையிலேயே மீண்டும் வெற்றி பெற்றேன். அந்த இறுதிப் போட்டியில் ரன்களையும் எடுத்தேன்."
"எத்தனை பேர் இதை செய்திருக்கிறார்கள்? பத்தாயிரம் ரன்கள் என்பது முக்கியமில்லை. எத்தனை பெரிய தொடர்களை வென்றிருக்கிறோம் என்பதுதான் முக்கியம். வீட்டில் எத்தனை பதக்கங்கள் உள்ளன, அதுதான் முக்கியம்" என்று கூறியிருக்கிறார் கௌதம் கம்பீர். அவர் இந்திய அணிக்காக 58 டெஸ்ட் போட்டிகள், 147 ஒருநாள் போட்டிகள் மற்றும் 37 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.


Click it and Unblock the Notifications