"யாரையும் குஷிப்படுத்த நான் இங்க வரல".. வைபவ் சூர்யவன்ஷி குறித்து கம்பீர் ஆவேச பதிலடி.. ஏன் இப்படி?
ஹாமில்டன்: நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை ஏற்கனவே கைப்பற்றிய பிறகும், இளம் அதிரடி ஆட்டக்காரர் வைபவ் சூர்யவன்ஷியை பிளேயிங் 11-ல் சேர்க்காமல் பெஞ்சில் அமர வைத்ததற்கு சமூக வலைதளங்களில் பலத்த விமர்சனங்கள் எழுந்தன. இதற்கு இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார்.
ஐபிஎல் 2026 தொடரில் பல சாதனைகளைப் படைத்த 15 வயது வைபவ் சூர்யவன்ஷி, நியூசிலாந்துக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் 19 பந்துகளில் 45 ரன்கள் விளாசி மிரட்டினார். ஆனால் இஷான் கிஷன் காயம் குணமடைந்து திரும்பியவுடன், 4 மற்றும் 5-வது போட்டிகளில் வைபவ் மீண்டும் பெஞ்சில் உட்கார வைக்கப்பட்டார். தொடரை வென்ற பிறகும் இளம் வீரருக்கு வாய்ப்பளிக்காதது ஏன் என கிளம்பிய கேள்விகளுக்கு கம்பீர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

இது குறித்துப் பேசிய கம்பீர், "முதலில் ஒன்று சொல்கிறேன், இங்கு எல்லோரையும் மகிழ்ச்சிப்படுத்துவது எனது வேலை கிடையாது. சமூக வலைதளங்களில் வைரலாகும் முடிவுகளை எடுப்பதை விட, சரியான முடிவுகளை எடுப்பதே தலைமைப் பயிற்சியாளராக எனது கடமை. இன்றைய காலகட்டத்தில் வெளியில் நிலவும் பேச்சுகளுக்காக எளிதான முடிவுகளை எடுத்துவிட முடியும். ஆனால் எனக்கு டிரஸ்ஸிங் ரூமில் உள்ள வீரர்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்குவதே முக்கியம். நீண்ட காலமாக அபாரமாக ஆடி வரும் சீனியர் வீரர்களுக்கு கூடுதல் வாய்ப்புகளையும் நம்பிக்கையையும் கொடுக்க வேண்டியது அவசியம்" என்றார்.
தொடரை வென்ற பிறகு நடக்கும் போட்டிகளில் வீரர்களை சுழற்சி முறையில் பயன்படுத்தாதது குறித்து விளக்கிய அவர், "நாட்டிற்காக விளையாடும்போது அஜாக்கிரதைக்கு இடமே இல்லை. கிரிக்கெட் வரலாற்றில் மிகச் சிலருக்கு மட்டுமே இந்திய அணிக்காக ஆடும் வாய்ப்பு கிடைக்கிறது. என் அகராதியிலும் சிந்தனையிலும் சம்பிரதாய போட்டிகள் என்று எதுவுமே கிடையாது. ஒவ்வொரு சர்வதேச போட்டியும் நம்மை மெருகேற்றிக் கொள்ளக் கிடைத்த வாய்ப்பு. இதே எண்ணம்தான் அணியின் ஒட்டுமொத்த டிரஸ்ஸிங் ரூமிலும் உள்ளது" என்று கம்பீர் திட்டவட்டமாகக் கூறினார்.


Click it and Unblock the Notifications

