மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், தற்போதைய தலைமை பயிற்சியாளர் கம்பீர் மீது பலருக்கும், பல விமர்சனங்கள் இருக்கலாம். வெள்ளை நிற கிரிக்கெட் பந்துகளில் இந்தியாவுக்கு இரண்டு உலக கோப்பையை வென்று தந்ததில் கம்பீருக்கு முக்கிய பங்கு இருக்கிறது.
அப்படி இருக்கும் போது கம்பீருக்கு ஏதோ டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாட தெரியாது! அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் வேஸ்ட் என்பது போல் பலரும் பேசி வருகிறார்கள். கவாஸ்கர், கம்பீரின் சராசரியை கடுமையாக விமர்சித்து பேசி இருக்கிறார்.

அண்மையில் கம்பீரை மோசமாக இங்கிலாந்து ஜாம்பவான் ஜெஃப்ரி பாய்காட் விமர்சித்து இருந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரல் ஆனது. அதில் கம்பிருக்கு டெஸ்ட் கிரிக்கெட் விளையாட தெரியாது. சொந்த மண்ணில் தான் அவர் ரன்கள் அடித்திருக்கிறார் என்பது போல் அவர் பேசியிருந்தார்.
ஆனால் உண்மை என்னவென்றால் சர்வதேச டெஸ்ட் தரவரிசை பட்டியலில் 2009 ஆம் ஆண்டு கம்பீர் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் என்ற தரவரிசையில் உச்சம் பெற்றார். டெஸ்ட் கிரிக்கெட் ஆட தெரியாமல் டெஸ்ட் ரேங்கில் நம்பர் ஒன் வீரர் ஆக எல்லாம் வர முடியாது.
அது மட்டும் அல்லாமல் பேட்டிங் விளையாடுவதற்கு மிகவும் கடுமையான மைதானமாக கருதப்படும் நியூஸிலாந்தில் கம்பீர் 2009ஆம் ஆண்டு டெஸ்ட் தொடரில் இரண்டு சதம், ஒரு அரை சதம் அடித்திருந்தார். அந்த தொடரில் இந்திய அணி 42 ஆண்டுகளுக்குப் பிறகு நியூசிலாந்து மண்ணில் வெற்றி பெற்றது. அந்த வெற்றிக்கு கம்பீரும் ஒரு முக்கிய பங்கு.
இங்கிலாந்து ஆஸ்திரேலிய மண்ணில் கம்பீர் விளையாடும்போது ஒட்டுமொத்த அணியுமே சரிவை நோக்கி சென்றது.இதனால், அதனை கேள்வி கேட்பதில் நியாயமில்லை. தென்னாப்பிரிக்காவில் கம்பீரின் டெஸ்ட் சராசரி 60 என்ற அளவில் இருக்கிறது. இதனால் கம்பீருக்கு டெஸ்ட் கிரிக்கெட் விளையாட தெரியாது என்ற வாதத்தை கொஞ்சம் கூட ஏற்க முடியாது.
பயிற்சியாளர் ஆவதற்கு நன்றாக பேட்டிங் செய்து ரெகார்ட் வைத்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அதேபோல் நன்றாக பேட்டிங் ரெக்கார்டு வைத்திருக்கும் ஒரு வீரர் நல்ல பயிற்சியாளராக இருக்க வேண்டும் என்ற தேவையும் இல்லை.தற்போது கம்பீரை உடனடியாக குற்றவாளி கூண்டில் ஏற்றாமல், அவருக்கு கொஞ்சம் நேரம் தரலாம். ஆரோக்கியமான முறையில் விமர்சிக்கலாம்.