விராட் கோலி, ரோகித் சர்மா உலககோப்பையில் இடம் பெறுவார்களா? கம்பீர் பேச்சால் ரசிகர்கள் கோபம்
விசாகப்பட்டினம்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விராட் கோலி, ரோஹித் ஷர்மா சிறப்பாக விளையாடிய போதும், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கம்பீர் அவர்களின் உலகக் கோப்பை இடத்தை உறுதிப்படுத்த மறுத்துவிட்டார். இதன் மூலம் அணியில் சீனியர் வீரர்களுடன் கம்பீர் மோதல் போக்கை கடைப்பிடிக்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரில், விராட் கோலி இரண்டு சதங்களும் ஒரு அரைசதமும் விளாசினார்.ரோஹித் ஷர்மா இரண்டு அரைசதங்களுடன் தரவரிசையில் நம்பர் 1 வீரராக விளங்குகிறார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முந்தைய தொடரிலும் இவர்கள் அசத்தினர். இருப்பினும், உலகக் கோப்பை வாய்ப்பு குறித்து கம்பீர் உறுதியளிக்க மறுத்துவிட்டார்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரை வென்ற நிலையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய கம்பீர், "விராட் கோலி, ரோஹித் ஷர்மா இருவரும் உலகத்தரம் வாய்ந்த வீரர்கள். அவர்களின் அனுபவம் அணிக்கு மிகவும் அவசியம். நீண்ட காலமாக இதைச் சிறப்பாகச் செய்து வருகிறார்கள்."
"50 ஓவர் கிரிக்கெட்டுக்கு இது தேவையாக இருக்கும்" என்று குறிப்பிட்டார். உலகக் கோப்பை தொடருக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் இருக்கின்றன என்பதை நீங்கள் உணர வேண்டும். நிகழ்காலத்தில் கவனம் செலுத்துவது முக்கியம். மேலும், இளம் வீரர்களும் தங்களுக்குக் கிடைக்கும் வாய்ப்புகளை முறையாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்".
"ருதுராஜ் தனது பேட்டிங் நிலையிலிருந்து வெளிவந்து சிறப்பாக விளையாடி இருக்கிறார். அவர் தரமான வீரர். இந்திய 'ஏ' அணியில் சிறந்த பார்மில் இருந்ததால், இத்தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டது. நெருக்கடியில் அவர் இந்த வாய்ப்பைச் சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்டார்."
"ருதுராஜ் அடித்த சதம் தரமானது. ஜெய்ஸ்வாலின் சதமும் அப்படியானது. டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது திறமையை நாம் பார்த்திருக்கிறோம். குறிப்பாக, வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் இது அவர்களின் ஆரம்பம் மட்டுமே. இந்த இருவருக்கும் சிறப்பான எதிர்காலம் இருக்கிறது என்று நான் நம்புகிறேன்" என அவர் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
கம்பீரின் இந்த பேட்டி மூலம் விராட் கோலியையும், ரோகித் சர்மாவையும் அவர் ஓரங்கட்ட முயற்சி செய்கிறார் என்று ரசிகர்கள் கடுமையாக சாடியுள்ளனர். ஒரு பேச்சுக்கு கூட இருவரும் 2027 உலககோப்பையில் விளையாடினால், அது அணிக்கு நன்மையை தரும் என்று கம்பீர் சொல்வது கிடையாது என்றும் ரசிகர்கள் விமர்சித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications