சம்பளப் பாக்கி காரணமாகவே கெயில் பயிற்சிக்கு வரலையாமே..?
பெர்த்: உலககக் கோப்பை கிரிக்கெட்டில் இரட்டை சதமடித்த முதல் வீரர் என்ற சாதனையை, மேற்கிந்திய தீவுகள் அணியின் கிறிஸ் கெயில் படைத்தாலும் படைத்தார் தற்போது அவர் மீதுள்ள எதிர்பார்ப்பு ஏகத்துக்கும் எகிறி கிடக்கிறது... 40 ஆண்டு கால உலகக் கோப்பை வராலற்றில் விழுந்த முதல் இரட்டை சதம் இது. ஆனால் சம்பளப் பாக்கி காரணமாகவே அவர் பயிற்சிக்கு வராமல் இருப்பதாக புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது.
கெய்ல் நின்னா செய்தி, நடந்தா செய்தி, அவர் தும்மினாலும் செய்தி என்றாகிவிட்டது. நாளை இந்திய அணியுடன் அதி முக்கியமான போட்டியில் மோதவுள்ள நிலையில், கெய்ல் எப்படி ஆடப்போகிறாரோ என்ற எதிர்பார்ப்பு ஏகத்துக்கும் எகிறியுள்ளது.
இது ஒருபுறம் இருக்க மேற்கிந்திய தீவுகள் அணிக்குள் கலவரம் வெடித்துள்ளதாம். அந்த அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் கிறிஸ் கெயில் இரண்டாவது நாளாக பயிற்சியை புறக்கணித்து வருகிறார்.

முக்கியமான போட்டி
உலகக் கோப்பை போட்டியில் வரும் வெள்ளிக்கிழமையன்று இந்திய அணியுடன் மேற்கிந்திய தீவுகள் அணி மோதுகிறது. இந்த போட்டி மேற்கிந்திய தீவுகள் அணிக்கு மிக முக்கியமானது.

ஜெயிக்கணும் பாஸ்
இதுவரை மோதியுள்ள மூன்று போட்டிகளில் மேற்கிந்திய தீவுகள் அணி, இரண்டில் வெற்றி பெற்றுள்ள நிலையில், இந்திய அணியை வீழ்த்தினால் அந்த அணிக்கு காலிறுதி வாய்ப்பு பிரகாசமடையும்.

கெய்ல் ஆப்சென்ட்
இந்நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் கிறிஸ் கெய்ல் கடந்த இரு நாட்களாக பயிற்சியில் ஈடுபடவில்லையாம்.

வராத கெய்ல்
பெர்த் நகரில் உள்ள, முர்டோக் பல்கலைக்கழக மைதானத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்கள் அனைவரும் இன்று பயிற்சியில் ஈடுபட்டனர். ஆனால் கிறிஸ் கெய்ல் மட்டும் பயிற்சிக்கு வரவில்லை.
மேற்கிந்திய தீவுகள் அணி மேலாளர் கிளைவ் லாயிட், பயிற்சியில் ஈடுபடுமாறு கெய்லை கேட்டுக் கொண்டும், கிறிஸ் கெய்ல் பெவிலியனை விட்டு வெளியே வரவில்லை.

காயத்தால் ஓய்வு?
முதலில் முதுகுவலி, காயம் காரணமாக கிறிஸ் கெய்லுக்கு ஓய்வு அளிக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் உண்மை அதுவல்லவாம்.

சம்பளம் தரலையாம்
உலகக் கோப்பை போட்டியில் விளையாடி வரும் மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்களுக்கு அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் சம்பளம் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துதான் கெய்ல் பயிற்சியில் ஈடுபடவில்லை என்றும் தெரிகிறது.

அணியின் நம்பிக்கை
மேற்கிந்திய தீவுகள் அணியின் பேட்டிங்கே கெய்லை நம்பி இருப்பதால் கிரிக்கெட் வாரியம், கெய்ல் மீது நடவடிக்கை எடுக்க தயங்கி வருவதாகவும் கூறப்படுகிறது.

மனஅழுத்தம்
உலகக்கோப்பை போட்டியில் ஜிம்பாப்வேக்கு எதிரான ஆட்டத்தில் இரட்டை சதம் அடித்த கெய்ல் ஏற்கனவே மனஅழுத்தத்தில் பாதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. எனவேதான் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக இரட்டை சதமடித்து பிரமிப்பை ஏற்படுத்திய கிறிஸ் கெய்ல், தென்ஆப்ரிக்க அணிக்கு எதிராக 3 ரன்களில் அவுட்டாகி பரிதாபமாக வெளியேறினார்.

நாளை எப்படியோ?
இந்தியாவுக்கு எதிரான போட்டியில் கெய்ல் மீண்டும் விறுகொண்டு எழுவாரா? விசுக்கென்று போவாரா? என்று ரசிகர்கள் இப்போதே எதிர்பார்க்க ஆரம்பித்துவிட்டனர்.


Click it and Unblock the Notifications