எல்லாரும் என்னையே மாட்டிவிடுறாங்க.. ரோகித் சர்மாவை கோர்த்துவிட்ட விராட் கோலி.. சிரித்த NZ வீரர்கள்!
அக்லாண்ட்: நியூசிலாந்து நெட் பவுலர்களிடம் விராட் கோலி, என்னிடம் அவ்வளவு பேட்கள் இல்லை.. ரோகித் சர்மாவிடம் கேளுங்கள் என்று கோர்த்துவிட்டது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. விராட் கோலியின் வார்த்தையை கேட்டுவிட்டு உடனடியாக நெட் பவுலர்கள், ரோகித் சர்மாவின் பேட்டுகளை எண்ண தொடங்கி இருக்கின்றனர்.
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நாளை தொடங்க உள்ளது. இந்திய அணியின் சீனியர் வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா களமிறங்குவதால், ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த ஒருநாள் தொடருக்கான இரு வீரர்களும் தீவிர பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் வலைப் பயிற்சியின் போது ஜாலியான ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. நியூசிலாந்தை சேர்ந்த நெட் பவுலர்கள் இந்திய அணியின் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவுக்கு பவுலிங் செய்திருக்கின்றனர். நியூசிலாந்து நெட் பவுலர்களின் செயல்பாடுகளால் இரு சீனியர் வீரர்களும் உற்சாகம் அடைந்துள்ளனர். ஒரு நல்ல பேட்டிங் பயிற்சி கிடைத்ததாக திருப்தி அடைந்திருக்கின்றனர்.
அப்போது நியூசிலாந்து நெட் பவுலர் ஒருவர் ரோகித் சர்மாவிடம், ஒரு பேட் எனக்கு கொடுக்க முடியுமா என்று கோரிக்கை வைத்துள்ளார். இதனால் ஆச்சரியம் அடைந்த ரோகித் சர்மா உடனடியாக, நோ கூறியுள்ளார். இதன்பின் நெட் பவுலர்களின் கவனம் விராட் கோலி பக்கம் திரும்பி இருக்கிறது. இதனை உணர்ந்த விராட் கோலி, என்னிடம் போதுமான பேட்டுகளே இல்லை.. ரோகித் சர்மாவிடம் தான் நிறைய இருக்கிறது என்றிருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல், விராட் கோலி ஒரு பெட் வைத்திருக்கிறார். அது என்னவென்றால், யாரிடம் அதிக பேட் இருக்கிறதோ, அவர்கள் நெட் பவுலருக்கு ஒரு பேட் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். உடனடியாக நெட் பவுலர்கள் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியின் பைகளில் இருக்கும் பேட்டுகளை எண்ண தொடங்கியுள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ரோகித் சர்மா, " எல்லாரும் என்னையே குறி வைக்கிறாங்களே" என்று புலம்பி இருக்கிறார். இதனால் பயிற்சி சூழல் ஜாலியாக மாறி இருக்கிறது. இதன் புகைப்படங்கள் வெளியாகி ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ரசிகர்கள் மத்தியில் டிரெண்டாகி வருகிறது.


Click it and Unblock the Notifications
