அகமதாபாத் : குஜராத் - மும்பை அணிகளுக்கு இடையிலான போட்டி முடிவடைந்த பின், பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, இளம் வீரர் இஷான் கிஷனுடன் பேசிய சம்பவம் ரசிகர்களிடையே விவாதமாகியுள்ளது.
மும்பை அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய குஜராத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 168 ரன்கள் சேர்த்தது. இதன்பின் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 162 ரன்கள் மட்டுமே சேர்த்து தோல்வியை சந்தித்தது.

இந்த போட்டியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இஷான் கிஷன் டக் அவுட்டாகி வெளியேறினார். தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன் இஷான் கிஷன் மனசோர்வு காரணமாக நாடு திரும்பினார். ஆனால் இந்திய அணியில் ஜித்தேஷ் சர்மாவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டதால், இஷான் கிஷன் கோபித்து கொண்டு அணியில் இருந்து வெளியேறியதாக தகவல் வெளியாகியது.
இதனை தொடர்ந்து இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன் இஷான் கிஷனை ரஞ்சி டிராபி போட்டிகளில் விளையாட இந்திய அணி நிர்வாகம் தரப்பில் அறிவுறுத்தப்பட்டது. ராகுல் டிராவிட், கேப்டன் ரோகித் சர்மா உள்ளிட்டோர் நேரடியாக பேசியும் இஷான் கிஷன் கடைசி வரை ஒரு ரஞ்சி டிராபி போட்டியில் கூட விளையாடவில்லை.
இதனால் பிசிசிஐ தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வு குழு இஷான் கிஷனை பிசிசிஐ ஒப்பந்தத்தில் இருந்து வெளியேற்றுவதாக அறிவித்தது. இதனால் இஷான் கிஷன் மீண்டும் இந்திய அணியில் இடம்பிடிக்க ஐபிஎல் தொடரில் மிகப்பெரிய ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய தேவை எழுந்தது.
ஆனால் முதல் போட்டியிலேயே டக் அவுட்டாகி வெளியேறியதால் ரசிகர்கள் பலரும் கிண்டல் செய்தனர். இந்த நிலையில் குஜராத் - மும்பை இடையிலான போட்டியை நேரில் காண வந்த பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, போட்டி முடிவடைந்த பின்னர் இஷான் கிஷன் தோளில் கைகளை போட்டப்படி பேசிய வீடியோ வெளியாகியுள்ளது. இதனால் இஷான் கிஷன் விரைவில் பிசிசிஐ ஒப்பந்தத்தில் இணைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.