கடைசி 5 ஓவரில் 34 ரன்கள், 7 விக்கெட்ஸ்.. சொதப்பிய குஜராத் பேட்ஸ்மேன்கள்.. SRH அணியின் மாஸ் கம்பேக்!
அகமதாபாத்: குஜராத் அணியின் இளம் வீரர் சுப்மன் கில்லும் அதிரடியான சதம் காரணமாக 20 ஓவர்களில் 188 ரன்கள் சேர்த்துள்ளது. ஐதராபாத் அணி சார்பாக புவனேஷ்வர் குமார் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 62வது லீக் போட்டியில் குஜராத் அணியை எதிர்த்து ஐதராபாத் அணி விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி கேப்டன் எய்டம் மார்க்ரம் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதன்பின்னர் குஜராத் அணி சார்பாக சுப்மன் கில் - சாஹா இணை தொடக்க கூட்டணியாக களமிறங்கியது. அதில் சாஹா முதல் ஓவரிலேயே ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து வெளியேறினார்.

இதன்பின்னர் சுப்மன் கில் - சாய் சுதர்சன் கூட்டணி இணைந்தது. சாய் சுதர்சன் நிதானமாக விளையாட, மறுபக்கம் சுப்மன் கில் ருத்ர தாண்டவம் ஆடினார். இதன் மூலம் பவர்பிளே ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 65 ரன்கள் சேர்த்திருந்தது. இதையடுத்து 22 பந்துகளில் அரைசதம் விளாசிய சுப்மன் கில், அதிரடியை அடுத்த கியருக்கு மாற்றினார். இதனால் 10 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 104 ரன்களை சேர்த்தது. இவர்களின் பார்ட்னர்ஷிப் 100 ரன்களை கடந்த நிலையில், விக்கெட் வீழ்த்த முடியாமல் ஐதராபாத் பந்துவீச்சாளர்கள் திணறினர்.

இதையடுத்து மார்க்கோ யான்சன் வீசிய 11வது ஓவரில் சாய் சுதர்சன் சிக்சர் மற்றும் பவுண்டரியை விளாசி அசத்தினார். அதேபோல் அபிஷேக் சர்மா ஓவரில் சுப்மன் கில்லும் ஒரு பவுண்டரி, சிக்சரை விளாசி தள்ளினார். இந்த நிலையில் பார்ட்னர்ஷிப் 147 ரன்களை எட்டிய நிலையில், சாய் சுதர்சன் 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து வந்த ஹர்திக் பாண்டியா 8 ரன்களிலும், மில்லர் 7 ரன்களிலும், டிவாட்டியா 3 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இருப்பினும் தொடர்ந்து அதிரடியாக ஆடிய சுப்மன் கில் 56 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார்.

இதனால் 19 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 186 ரன்கள் சேர்த்திருந்தது. இந்த நிலையில் கடைசி ஓவரின் முதல் இரு பந்துகளில் சுப்மன் கில் மற்றும் ரஷித் கான் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். மூன்றாவது பந்தில் நூர் அஹ்மத் ரன் அவுட்டாக, ஐதராபாத் அணி டீம் ஹாட்ரிக் விக்கெட்டை வீழ்த்தியது. பின்னர் 5வது பந்தில் ஷமியும் ஆட்டமிழக்க, கடைசி ஓவரில் 2 ரன்கள் மட்டுமே சேர்க்கப்பட்டது. இறுதியாக குஜராத் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 188 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளது. ஐதராபாத் அணி சார்பாக புவனேஷ்வர் குமார் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.


Click it and Unblock the Notifications