"ஐபிஎல்-லில் வராது ஆனால் தாய்நாட்டுக்காக ஆடும்போது மட்டும் வருமா?" இந்திய வீரர்களை விளாசிய விஹாரி
மும்பை: இந்திய அணி வீரர்களுக்கு தாய்நாட்டிற்காக விளையாடும் ஆர்வம் குறைந்து, ஐபிஎல் தொடரில் கிடைக்கும் பணம் மற்றும் புகழக்காக சர்வதேச கிரிக்கெட்டை அவர்கள் அலட்சியப்படுத்துகிறார்களா என்றும் இந்திய டெஸ்ட் அணி வீரர் ஹனுமா விஹாரி கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 தொடருக்கு முன்னதாக இந்திய வீரர்களின் காயங்கள் குறித்துப் பேசிய ஹனுமா விஹாரி, "ஹர்திக் பாண்டியா, நிதிஷ் குமார் ரெட்டி, வருண் சக்கரவர்த்தி ஆகியோர் ஐபிஎல் தொடர் முழுவதும் விளையாடி விட்டு, சர்வதேச போட்டிகள் என்று வரும்போது மட்டும் காயம் அடைவது ஏன்? ஹர்ஷித் ராணா ஐபிஎல் விளையாடவில்லை, ஆனால் இந்திய அணிக்குத் திரும்பிய உடனே மீண்டும் காயமடைந்து வெளியேறுகிறார்.

ஐபிஎல்லில் முழுமையாக விளையாடும் போது வராத காயம், தாய்நாட்டிற்காக விளையாடும் போது மட்டும் எப்படி வருகிறது?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் பேசிய அவர், "உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்றால் 10 முதல் 12 போட்டிகளில் அனைத்து வீரர்களும் முழு உடற்தகுதியுடன் விளையாட வேண்டும் என்று சுப்மன் கில் கூறியிருந்தார். ஆனால் 2 அல்லது 3 போட்டிகளுக்குப் பிறகு வீரர்கள் காயத்தால் விலகினால், அணியை தொடர்ந்து மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
இந்திய வீரர்களுக்கு சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடப் போதிய ஆர்வம் இல்லையா? அல்லது ஐபிஎல்லில் பணமும் புகழும் கிடைப்பதால் இந்திய அணியை அவர்கள் எளிதாக எடுத்துக்கொள்கிறார்களா?" என்று விளாசினார்.
அதே சமயம், பும்ராவை இதில் சேர்க்க முடியாது என்று கூறிய விஹாரி, "ஜஸ்பிரித் பும்ரா மூன்று வகை கிரிக்கெட்டிலும் தொடர்ந்து விளையாடுவதாலும், அவர் பெரிய காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ளதாலும் அவருக்கு பணிச்சுமை மேலாண்மை மிகவும் அவசியம். எனவே பும்ராவை இதிலிருந்து விதிவிலக்காகப் பார்க்க வேண்டும்" என்றார். ஹனுமா விஹாரியின் இந்த வெளிப்படையான பேச்சு கிரிக்கெட் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு முன்பும் பல முறை இது போல ஐபிஎல் தொடரில் முழுமையாக ஆடும் இந்திய வீரர்கள் இந்திய அணிக்காக ஆட முடியாமல் காயத்தால் விலகி இருக்கின்றனர். அது சர்ச்சையாக மாறி இருந்தது. ஆனால், இப்போது ஐந்துக்கும் மேற்பட்ட இந்திய அணி வீரர்கள் காயத்தில் சிக்கி அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications
